இந்திய மல்யுத்த கள நிலவரத்தில் புதிய திருப்பமாக, ‘முன்னணி வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷிமாலிக், வினேஷ் போகத் ஆகியோர் எங்களின் வாழ்க்கையில் ஓராண்டை வீணாக்கி விட்டனர்’ என்று கூறி, அவர்களுக்கு எதிராக 300-க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேசம், ஹரியாணா, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகளில் 300-க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் காலை 11 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் வந்திறங்கினர். அவர்கள் அனைவரும் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பாக்பத்திலுள்ள சப்ராலியின் ஆர்ய சமாஜ் அகாராவில் இருந்து வந்தவர்கள். மேலும், பலர் நரேலாவில் உள்ள விரேந்தர் மல்யுத்த அகாதமியில் இருந்தும் வந்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளம் வீரர்கள் கைகளில், ‘சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பே… எங்களை இந்த மூன்று (பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத்) வீரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர்.
இதே ஜந்தர் மந்தர் மைதானத்தில் இந்தியமல்யுத்த கூட்டமைப்பின் அப் போதைய தலைவர்பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி, அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னணி வீரர்களான சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் இந்தப்போராட்டத்துக்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், மகளிர் அமைப்பினர், சக மல்யுத்த வீரர்கள் என சமூகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆதரவளித்தனர்.
இந்த நிலையில், இந்த 3 மல்யுத்த சாம்பியன்கள்தான் தங்களின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறி, அவர்களுக்கு எதிராக இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவர்கள், கலைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகித்து வரும் தற்காலிகக்குழுவை கலைத்துவிட்டு, புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்,ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ள தேசிய அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை 10 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இளம் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours