சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு நடைபெற உள்ள மெகா ஏலத்துக்கு முன்னதாக தோனி, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தக்க வைக்கும் என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு ஐபிஎல் 2025 சீசனை முன்னிட்டு 10 ஐபிஎல் அணிகளும் வீரர்களை தக்க வைக்கும் விதிமுறைகள் ( IPL Retention) வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த 7-வது விதிமுறை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
‘சீசனுக்கு முந்தைய 5 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமால் உள்ள இந்திய Capped வீரர், Uncapped வீரராக கருதப்படுவார். அவர் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்று இருக்க கூடாது’ என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது அப்படியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு கச்சிதமாக பொருந்துகிற விதியாகும்.
இருப்பினும் அவர் எதிர்வரும் சீசனில் விளையாடுகிறாரா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. இது குறித்து தோனியுடன் பேசிய பிறகு தான் சொல்ல முடியும் என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் சொல்லி உள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்தது: “எதிர்வரும் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுவது உறுதி. அதில் துளியும் சந்தேகம் இல்லை. இப்போது அவர் Uncapped வீரராக உள்ளார். அணிக்காக அவர் நிறைய செய்துள்ளார். மேலும், அணியின் ‘நம்பர் 1 வீரர்’ தான் என்ற விருப்பமும் அவருக்கு இல்லை.
அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதேபோல ரவீந்திர ஜடேஜாவையும் தவிர்க்க முடியாது. ஆக, இந்த மூவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் தக்க வைக்கும்” என கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours