பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அந்த அணியில் அஸ்வின் மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் சேர்க்கப்படாமல், துருவ் ஜுரெல் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெர்த் மைதானத்தில் பங்கேற்கவுள்ளது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விரிவாக தனது பார்வையை முன் வைத்திருக்கிறார். அதில் தொடக்க வீரராக ரோஹித் சர்மா இல்லையென்றால், கேஎல் ராகுலை சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல் கடந்த முறை சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாடி இருக்கிறார். அபிமன்யூ ஈஸ்வரன் இந்திய ஏ அணிக்காக சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் வலைப்பயிற்சியில் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் ஒரு பயிற்சியாளராக பேட்ஸ்மேன்களின் கால்கள் எப்படி நகர்கிறது என்பதை கழுகை போல் பார்க்கும் பழக்கம் எனக்கு இருக்கிறது. சில நேரங்களில் பேட்ஸ்மேன்களிடம் இருந்து ரன்கள் வரவில்லை என்றாலும் பிரச்சனையில்லை.
அந்த மைதானத்தில் ரன்கள் குவிப்பதற்காக ஷாட்கள் அவரிடம் இருக்கிறதா, அவரின் கால்களை எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பார்ப்பேன். அதேபோல் பேட்ஸ்மேன்களுக்கு எப்படி நிதானம் முக்கியமோ, அதேபோல் பவுலர்களுக்கு பவுலிங் ரிதம் முக்கியம். ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் நிச்சயம் சேர்க்கப்படுவார்கள். ஆனால் இம்முறை துருவ் ஜுரெல் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாகவே விளையாட வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
துருவ் ஜுரெலின் நிதானம் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. அழுத்தத்தில் இருக்கும் போது அவர் பிடிவாதமாக பேட்டிங் செய்கிறார். அழுத்தம் இருக்கும் போது ஏராளமான வீரர்கள் திணறுவார்கள். அந்த நேரத்தில் வீரர்களின் பதற்றத்தை ஓய்வறையில் இருந்தே கண்டறிய முடியும். ஆனால் துருவ் ஜுரெலின் நிதானம் ஆச்சரியம் அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 80 மற்றும் 60 ரன்களை விளாசி இருக்கிறார்.
அவரின் நம்பிக்கை உச்சத்தில் இருக்கும். அதேபோல் தேவைக்கேற்ப அதிரடியாக பவுண்டரிகளை விளாசக் கூடிய வீரராக இருக்கிறார். டெய்லண்டர்களுடன் பேட்டிங் செய்வதை சிறு வயதிலேயே அறிந்து வைத்திருக்கிறார். ஒருவேளை சுப்மன் கில்லை தொடக்க வீரராக பயன்படுத்தினால், மிடில் ஆர்டரில் துருவ் ஜுரெலை எளிதாக சேர்க்க முடியும்.
பெர்த் மைதானத்தை பொறுத்தவரை ஒரேயொரு ஸ்பின்னர் போதும் என்று நினைக்கிறேன். கடந்த முறை பாகிஸ்தான் அணி பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடியதை நேரில் பார்த்தேன். பெர்த் மைதானத்தில் வேகமும், பவுன்ஸ்-ம் அதிகம் இருந்தது. அதனால் அஸ்வின் அல்லது ஜடேஜா இருவரில் ஒருவர் போதும் என்று கருதுகிறேன்.
அஸ்வினை விடவும் ஜடேஜாவால் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் கூடுதலாக பங்களிக்க முடியும். வேகப்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய மூவரும் நிச்சயம் இடம்பெற வேண்டும். 2 ஸ்பின்னர்களை எடுத்து செல்வதற்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டியை பிளேயிங் லெவனில் தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால் கடந்த முறை ஷர்துல் தாக்கூர் செய்த பணியை ஒரு வீரர் செய்ய வேண்டும்.
நிதீஷ் குமார் ரெட்டியால் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பங்களிக்க முடியும். சிறு சிறு ஸ்பெல்களை நிதீஷ் குமார் ரெட்டிக்கு கொடுத்து பயன்படுத்தலாம். ஒரு நாளில் 8 முதல் 10 ஓவர்களை வரை நிதீஷ் குமார் ரெட்டியால் தாராளமான பவுலிங் செய்ய முடியும். அதனால் அவரை தேர்வு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours