எடின்பர்க்கில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 9.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதில் ட்ராவிஸ் ஹெட் 17 பந்துகளில் அரைசதம் கண்டு அதிவேக அரைசத ஆஸ்திரேலிய சாதனையைச் சமன் செய்தார். மேலும் டி20 பவர் ப்ளேயில் அதிக ரன்களைத் தனியாகக் குவித்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார். ஹெட் மொத்தம் 25 பந்துகளைச் சந்தித்து 12 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 80 ரன்கள் எடுத்து 7வது ஓவர் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
ஸ்காட்லாந்து அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது ஜார்ஜ் முன்சியின் உத்வேகமான பவர் ப்ளே பேட்டிங்கில் அந்த அணி 12 ஒவர்களில் 101/3 என்று இருந்த நிலையிலிருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களின் வேகம் குறைக்கப்பட்ட knuckle பந்துகளைக் கணிக்கத் தவறி அடுத்த 44 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கோட்டை விட்டனர்.
154 ரன்கள் ஒருவேளை நல்ல இலக்காக இருக்கலாம் என்ற சந்தேகங்களை தவிடுபொடியாக்கி விட்டது டிராவிஸ் ஹெட்டின் அசாத்திய பவர் ப்ளே அதிரடி. டி20 சர்வதேச அறிமுகப் போட்டியை ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அதிரடி மன்னன் ஜேம்ஸ் பிரேசர் மெக்கர்க் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். ஆனால் அதன் பிறகு நடந்ததென்னவோ ஹெட்-மார்ஷ் கூட்டணியின் அதகளம், ரணகளம்தான்.
தொடர்ச்சியாக 14 பவுண்டரிகள் என்றால் ஸ்காட்லாந்தின் நிலைமை பரிதாபம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல? பவர் ப்ளேயில் இரண்டாவது அதிக ரன்களாக 113/1 என்ற ஸ்கோரை ஆஸ்திரேலியா எட்டியது, சாதனையாளன் ட்ராவிஸ் ஹெட் 73 ரன்களை இதில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 2020-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக அயர்லாந்தின் பால் ஸ்டர்லிங் எடுத்த 67 ரன்கள் என்ற பவர் ப்ளே தனிப்பட்ட அதிக ரன்கள் சாதனையை ஹெட் முறியடித்தார்.
மிட்செல் மார்ஷ் தன் பங்கிற்கு 12 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 39 ரன்களை விளாசினார். ஜாஷ் இங்லிஷ் 13 பந்துகளில் 27 ரன்கள்.
முன்னதாக ஸ்காட்லாந்து அணியில் ஜார்ஜ் முன்சி 16 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் எடுத்த 28 ரன்களே அந்த அணியில் தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. கேப்டன் ரிச்சி பெரிங்டன் 23 ரன்களையும் விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் 27 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஷான் அபாட் 3 விக்கெட்டுகளையும் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும் சேவியர் பார்லெட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் டிராவிஸ் ஹெட்.
+ There are no comments
Add yours