ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ், தெலங்கானா டிஜிபி அலுவலகத்தில் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார். விளையாட்டுத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் சிராஜுக்கு டிஎஸ்பி பொறுப்பு வழங்கி தெலங்கானா அரசு கவுரவித்துள்ளது.
ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது சிராஜ். அவரை கவுரவிக்கும் விதமாக அவருக்கு குரூப் 1 பணியிடம் வழங்கப்படும் என கடந்த ஜூலை மாதம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரேட்டி அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து அரசு வேலை தொடர்பான நியமனங்களில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
தெலங்கானா அரசின் அறிவிப்பின்படி இன்று தெலங்கானா டிஜிபி அலுவலகத்தில் கிரிக்கெட் வீரர் முஹம்மது சிராஜ் டிஎஸ்பியாக பதவி ஏற்றுக்கொண்டார். நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்க்கும் விதமாக செயல்பட்ட அவருக்கு டிஎஸ்பி பணி வழங்கி கவுரவித்துள்ளது தெலங்கானா அரசு. முஹம்மது சிராஜ் மட்டும் கவுரவிக்கப்படவில்லை. இரண்டு முறை உலக சாம்பியனான குத்துச்சண்டை வீரர் நிகத் ஜரீனையும் அரசு கவுரவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, டி20 உலக கோப்பை போட்டிகளில் சிராஜ் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு பக்கபலமாக திகழ்ந்தார். அதேபோல ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி கோப்பை வெல்ல உறுதுணையாக இருந்தார். இந்திய அணியில் முஹம்மது சிராஜ் மூன்று வடிவ போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours