செயின்ட் லூசியா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி 20 ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என தன்வசப்படுத்தியது.
செயின்ட் லூசியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பாவல் 41 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசினார். ரோமரியோ ஷெப்பர்டு 30, அல்சாரி ஜோசப் 21 ரன்கள் சேர்த்தனர்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான எவின் லீவிஸ் 3, ஷாய் ஹோப் 4, நிக்கோலஸ் பூரன் 7, ராஸ்டன் சேஸ் 7, ஷிம்ரன் ஹெட்மயர் 2 ரன்களில் நடையை கட்டினர். இங்கிலாந்து அணி தரப்பில் சாகிப் மஹ்மூத், ஜெமி ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6 ஓவர்களில் 39 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ரோவ்மன் பவல், ரோமரியோ ஷெப்பர்டு, அல்சாரி ஜோசப் ஆகியோர் சற்று தாக்குப்பிடித்து விளையாடியதால் கவுரவமான இலக்கை கொடுக்க முடிந்தது.
146 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சேம் கரண் 26 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டன் 28 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் விளாசினர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பில் சால்ட் 4, வில் ஜேக்ஸ் 32, கேப்டன் ஜாஸ் பட்லர் 4 ரன்களில் வெளியேறினர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் அகீல் ஹோசைன் 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 3-0 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது. 4-வது ஆட்டம் 17-ம் தேதி நடைபெறுகிறது.
+ There are no comments
Add yours