முனிச்: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின். இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஜெர்மனியின் முனிச் நகரில் அமைந்துள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து அசத்தியது பிரான்ஸ். அந்த அணியின் கேப்டன் எம்பாப்பே கொடுத்த பாஸை தலையால் முட்டி கோல் பதிவு செய்தார் முவானி. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பிரான்ஸ் கோல் பதிவு செய்தது ஸ்பெயினுக்கு அதிர்ச்சி அளித்தது.
இருந்தும் அட்டாக்கிங் பாணி ஆட்டத்தை ஸ்பெயின் தொடங்கியது. அதன் பலனாக 21-வது நிமிடத்தில் பாக்ஸுக்கு வெளியில் இருந்து ஸ்பெயின் அணியின் 16 வயது வீரர் லாமின் யாமல், பந்தை ஸ்ட்ரைக் செய்தார். அது அப்படியே லாங் ரேஞ்சில் கோல் கம்பத்தின் மேல்பக்கமாக சென்று கம்பத்தில் பட்டு வலைக்குள் சென்றது. இதன் மூலம் ஆட்டத்தில் கோல் கணக்கு சமன் ஆனது.
உலகக் கோப்பை அல்லது யூரோ கோப்பை போன்ற பிரதான கால்பந்து தொடரின் வரலாற்றில் இளம் வயதில் (16 ஆண்டுகள் 362 நாட்கள்) கோல் பதிவு செய்த வீரர் என்ற சாதனையை யாமல் படைத்தார். இதே தொடரில் கோல் பதிவு செய்ய தனது அணி வீரர்களுக்கு 3 அசிஸ்டை அவர் வழங்கியுள்ளார். இதற்கு முன்பு கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே, 1958 உலகக் கோப்பையில் வேல்ஸ் அணிக்கு எதிராக பிரேசில் அணிக்காக கோல் பதிவு செய்தது சாதனையாக இருந்தது. 17 ஆண்டுகள் 239 நாட்களில் இந்த சாதனையை பீலே படைத்து இருந்தார்.
பிரான்ஸ் அணியுடனான போட்டியில் ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் பதிவு செய்தது ஸ்பெயின். இதன் மூலம் 2-1 என முன்னிலை பெற்றது. இந்த முறை டேனி ஒல்மோ கோல் பதிவு செய்தார். அதன் பிறகு பந்தை ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ஸ்பெயின் அணி. அதன் மூலம் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அல்லது நெதர்லாந்து அணியுடன் ஸ்பெயின் பலப்பரீட்சை மேற்கொள்ளும்.
+ There are no comments
Add yours