17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோத உள்ளன.
இந்த நிலையில், இந்த சீசனில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் முக்கியமாக 6 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலர் நல்ல அனுபவம் மிக்கவர்களாகவும், சிலர் புதியவர்களாகவும் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீண்ட ஆண்டுகளாக வழிநடத்தி தோனி கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் வசம் ஒப்படைத்தார். கடந்த சீசனில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த சன் ரைசர்ஸ் ஐதராபாத், மினி ஏலத்தில் ரூ.20. 5 கோடிக்கு வாங்கிய, ஆஸ்திரேலிய அணிக்காக ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பை வென்று கொடுத்த பேட் கம்மின்சை கேப்டனாக்கி இருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அதன் தொடக்க சீசனிலே கோப்பையை வென்றும், அடுத்த சீசனில் மீண்டும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்சுக்கு தாவினார். அதனால், குஜராத் அணியின் கேப்டன் பதவி இளம் அதிரடி பேட்ஸ்மேன் சுப்மன் கில்லிடம் வழங்கப்பட்டுள்ளது.
மறுபுறம், தனது அணிக்காக 5 முறை சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்த ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டன் அரியணையில் அமர்த்தியுள்ளது.
ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதால் கடந்த ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்பட்டார். இப்போது ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைந்து டெல்லி அணிக்கு திரும்பியிருப்பதால் அவரே கேப்டனாக பணியாற்ற உள்ளார்.
இதே போல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சென்ற ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காயத்தால் ஒதுங்கியதால் நிதிஷ் ராணா கேப்டனாக இருந்தார். தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணியுடன் இணைந்திருப்பதுடன் கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார்.
+ There are no comments
Add yours