வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்று இந்தியா வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியோடு, இனி இந்திய அணியை யாராலும் அசைக்க முடியாது என்ற நம்பிக்கைகளையும் கொடுத்திருக்கக் கூடும். ஆனால் உண்மையில் இது போன்ற அர்த்தமற்ற தொடர்களை பிசிசிஐ நடத்தாமல் இருந்தால்தான் கிரிக்கெட்டுக்கு நல்லது.
இந்திய அணியைப் பொறுத்தவரை சஞ்சு சாம்சன், ரியான்பராக், நிதிஷ் ரெட்டி,, ஹர்திக் பாண்டியாவின் அல்ட்ரா மாடர்ன் அக்ரஷன் போன்றவை சிறந்த விளைவுகளாக இருந்தாலும் இந்தத் தொடரினால் ஆய பயன் என்ன என்பதைப் பார்த்தோமானால் ஒன்றுமில்லை என்றுதான் கூற வேண்டும்.
வங்கதேச அணி கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சொல்வது போல் ‘ஒரு பொட்டலம்’ அணி. ஒரு போட்டியிலாவது அவர்கள் ஒரு துணிவோடு ஆடியதாகத் தெரியவில்லை. பந்து வீச்சு வெறும் அரைக்குழி பந்துகள் இல்லையெனில் முழுக்குழிப் பந்துகள் என்று வீசி வீசி இந்திய பேட்டர்களிடம் சாத்து வாங்கினார்கள். அபிஷேக் சர்மா இந்த வாய்ப்பைத் தவற விட்டது அவருடைய கரியருக்கு நல்லதல்ல.
2009-ம் ஆண்டிலேயே ஐபிஎல் வந்த புதிதில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் கிரேம் ஸ்மித் கிரிக் இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில், ‘வீரர்களைக் காப்பாற்ற வேண்டுமெனில் அர்த்தமற்ற தொடர்களை நிறுத்த வேண்டும்’ என்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஒன்று இல்லாவிட்டால் இப்போதிருக்கும் பிசிசிஐ நிச்சயமாக வங்கதேசத்துடன் ஆட சம்மதிக்கவே சம்மதித்திருக்காது. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் நடந்தது பரவாயில்லை. ஆனால் எதற்கு இந்த டி20 தொடர்? சொத்தை டீமை அழைத்து ஆயிரக்கணக்கில் ரன்களைக் குவித்து சாதனை புரிந்ததாக ரசிகர்களை நம்ப வைப்பதற்கும் மார்தட்டுவதற்குமான தொடர்கள் ஏன் என்பதே நம் கேள்வி. ஏன் இந்தத் தொடரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆடியிருக்கக் கூடாது?
இது போன்ற தொடர்களினால் நிதிப்பயன்கள், லாபவேட்டை நடத்த முடியலாமே தவிர, அர்த்தமுள்ள கிரிக்கெட் தொடரா இது என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது. வீரர்களின் உடல்களை களைப்படையச் செய்வதுதான் இதன் மூலம் நடைபெறும் இந்திய அணிக்கு மட்டுமன்று, வங்கதேச அணிக்கும் மன/உடல் ரீதியான சோர்வே இத்தகைய தொடர்கள்.
அலி பாக்கர் என்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஐசிசி முன்னாள் அதிகாரி ஒருமுறை குறிப்பிட்டார், ‘ஐசிசி-யின் எதிர்காலப் பயணத்திட்டம் அதாவது எஃப்.டி.பி என்பது முழுமுதல் நான்சென்ஸ்’ என்று. மேலும் அவர் கூறும்போது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்கள் சொற்படிதான் தொடர்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
இது இந்த மூன்று வாரியங்களுக்கும் அணிகளுக்கும்தான் சாதகம். தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இதனால் பின்னடைவே என்றார் அலி பாக்கர். இவர் இதை ஏதோ 10 ஆண்டுகளுக்கு முன்பு கூறவில்லை, 2023ம் ஆண்டு கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் என்பது 3 அணிகளுக்கு மட்டுமானதல்ல என்று அவர் கடுமையாகச் சாடினார். குறிப்பாக 2023-27 எஃப்.டி.பி. சுழற்சியில் தென் ஆப்பிரிக்கா 28 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே ஆட, இங்கிலாந்து 43, ஆஸ்திரேலியா 40, இந்தியா 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகின்றது. இப்படி கிரிக்கெட்டை வெறும் மும்முனைப் போட்டியாக மாற்றுவதால் சாதனைகள் உட்பட கிரிக்கெட்டின் அனைத்து சாதகங்களும் இந்த மூன்று நாடுகள் வசமே இருக்கும் என்கிறார் அலி பாக்கர். ஆன்ரிச் நோர்க்கியா 50 டெஸ்ட் போட்டிகளை விளையாட முடியுமா? ரபாடா 400 டெஸ்ட் விக்கெட்டுகள் சாதனை நிகழ்த்த முடியுமா? என்கிறார். ஆகவே சாதனைகள் என்பது ஏதோ தனி மனித திறமை சார்ந்தது என்பது மட்டுமல்ல, வாய்ப்புக்கான மேடை அமைத்துக் கொடுப்பதன் அமைப்புசார் ஏற்பாடுகளின் விளைவுகள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
+ There are no comments
Add yours