மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 86 ரன்களைச் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 149 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களைச் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இந்திய அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அஜாஸ் படேல் வீசிய 18-வது ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்களுக்கு போல்டானார். அதே ஓவரில் சிராஜ் ரன்அவுட். அடுத்த ஓவரில் விராட் கோலி 4 ரன்களுக்கு ரன் அவுட். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 19 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 86 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி, நியூஸிலாந்தை விட 149 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஷுப்மன் கில் 31 ரன்னுடனும், ரிஷப் பந்து 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
+ There are no comments
Add yours