அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று முன்தினம் முடிவடைந்த அடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் விளாசிய நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் வீசிய பந்தில் போல்டானார்.
அப்போது சிராஜ் ஆவேசமாக, டிராவிஸ் ஹெட்டை நோக்கி திரும்பி செல்லுமாறு சைகை செய்தார். அதேவேளையில் போல்டானதும் டிராவிஸ் ஹெட், சிராஜை நோக்கி ஏதோ கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, சிராஜை நோக்கி, ‘சிறப்பான பந்து வீச்சு’ என்றே கூறினேன். ஆனால், அவர் அதை வேறுவிதமாக எடுத்துக்கொண்டதாக டிராவிஸ் ஹெட் கூறினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சிராஜ், டிராவிஸ் ஹெட் தகாத வார்த்தைகளை பயன்டுத்தியதாக கூறினார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி நேற்று விசாரணை நடத்தியது. இதில் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக முகமது சிராஜுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. அதேவேளையில் டிராவிஸ் ஹெட் வேறும் எச்சரிக்கையுடன் மட்டும் தப்பினார். அவருக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை.
+ There are no comments
Add yours