மும்பை: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து 171 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 143 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (நவ.1) தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 263 ரன்களைச் சேர்த்தது. ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடி 90 ரன்களைச் சேர்த்தார். ரிஷப் பந்து 60 ரன்களுக்கு அவுட்டானார். இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 28 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்தின் கேப்டன் டாம் லேதம் 1 ரன்னுக்கு போல்டாகி வெளியேறினார். டெவோன் கான்வே 22 ரன்களில் கிளம்பினார். ரச்சின் ரவீந்திரா 4 ரன்களில் நடையைக் கட்டினார். வில் யங் மட்டும் பொறுப்பாக ஆடி 51 ரன்களைச் சேர்க்க, டேரில் மிட்ஷெல் 21 ரன்கள், டாம் ப்ளண்டெல் 4 ரன்கள், க்ளென் பிலிப்ஸ் 26 ரன்கள், இஷ் சோதி 8 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
மேட் ஹென்றி 10 ரன்களில் அவுட்டாக இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணி 171 ரன்களைச் சேர்த்தது. இதன் மூலம் நியூஸிலாந்து இந்திய அணியை விட 143 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இரண்டாம் நாளில் இந்திய பவுலர்களின் ஆதிக்கத்தை காண முடிந்தது. ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
+ There are no comments
Add yours