வங்கதேசம்: ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, அரசியல்வாதியும் கூட. இவரது இந்த இரட்டை அடையாளம்தான் பிரச்சனையின் மையமே.. என்று வங்கதேச இளையோர் மற்றும் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் மஹ்மூத் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஓய்வு அறிவித்த ஷாகிப் அல் ஹசன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாக்காவில் தன் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடி பிரியாவிடை அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு கொலை வழக்கில் இவர் குற்றவாளியாக முதல் தகவலறிக்கையில் சேர்க்கப்பட்ட நிலையிலும் அரசியல் நிலைப்பாடு காரணமாக 10 கோடி மக்கள் அவர் மீது கோபமாயிருக்கும் போதும் அவர் அரசு பாதுகாப்பு உத்தரவில்லாமல் வங்கதேசத்துக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற உள்நாட்டு போராட்டங்களில் நடந்த கொலை வழக்கில் ஷகிப் அல் ஹசன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ரபீகுல் இஸ்லாம் என்பவரை கொலை செய்ததாக கூறி அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷகிப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அவர் வங்கதேசம் சென்றால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் நாடு திரும்புவது குறித்து யோசித்து வருகிறார்.
இந்நிலையில் ஏற்கெனவே இது குறித்து ஷாகிப் அல் ஹசன் கூறியபோது, “இப்படியான நிலையில் எனக்கு பிரியாவிடைஅளிக்கும் வகையில் கிரிக்கெட் அணி நிர்வாகம் உரிய பாதுகாப்பு அளித்தால் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை சொந்த ஊரில் விளையாடுவேன். இல்லாவிட்டால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தான் என்னுடைய கடைசி டெஸ்ட்” என ஷகிப் அல் ஹசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இளையோர் மற்றும் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் மஹ்மூத் கூறும்போது, “தன் குடிமகனுக்கு வங்கதேச அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை. நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம். இந்தச் சந்தர்ப்பத்தில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, அரசியல்வாதியும் கூட. இவரது இந்த இரட்டை அடையாளம்தான் பிரச்சனையின் மையமே. அவாமி லீக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டவர்.
மக்களிடையே இந்த இரட்டை அடையாளம் குறித்து ஷாகிப் அல் ஹசன் மீது கலப்பான உணர்வுகள் நிலவுகின்றன. ஷாகிப் என்ற கிரிக்கெட் வீரருக்கு பாதுகாப்பு அளிக்கவே செய்வோம். இது எங்கள் பொறுப்பு. ஆனால் இவரது அரசியல் அடையாளத்தை முன்னிட்டு அவர் மீது பொதுமக்களுக்கு கடும் கோபமிருக்கிறது எனும் போது என்ன செய்வது, உதாரணமாக எனக்கு 5 போலீஸ் கான்ஸ்டபிள்கள், துப்பாக்கி ஏந்திய ஒருவர் பாதுகாப்பாக இருக்கிறார். ஆனால் 160 மில்லியன் மக்களில் 10 கோடி பேர் ஷாகிப் மீது கடும் கோபமாக இருக்கும் போது 5 அல்லது 6 பேர் பாதுகாவல் போதுமானதாக இருக்குமா என்பதுதான் கேள்வி.
எனவே மக்கள் என் மீது கொண்டுள்ள கோபத்தைத் தணிக்க நான் வார்த்தைகளைத்தான் நம்ப வேண்டும். ஷாகிப் தன் அரசியல் நிலைப்பாட்டை மக்கள் முன் தெளிவுபடுத்த வேண்டும். மஷ்ரபே மோர்டசா ஏற்கெனவே கூறியதன் படி மக்கள் திரள் கோபத்துடன் இருந்தால் யாருக்கும் யாரும் பாதுகாப்பு அளிக்க முடியாது. ஷேக் ஹசீனாவுக்கே பாதுகாப்பு கிடைக்கவில்லை, நாட்டை விட்டு தப்பிச் செல்ல வேண்டியதாயிற்று. எனவே ஷாகிப் தன் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவது அவசியம்” என்றார்.
+ There are no comments
Add yours