ஆப்கானிஸ்தானிடம் 2-1 என்று சமீபத்தில் ஒருநாள் தொடரை இழந்த தென் ஆப்பிரிக்கா, நேற்று அயர்லாந்துக்கு எதிராக 2வது டி20 போட்டியை இழக்க, முதல்முறையாக அயர்லாந்து தென் ஆப்பிரிக்காவை டி20யில் வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் சமன் செய்து சாதனை படைத்துள்ளது.
அபுதாபியில் நேற்று நடைபெற்ற 2-வதும், இறுதியுமான டி20 போட்டியில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்டுள்ள 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்களைக் குவிக்க, தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை இழந்து தோல்வி அடைந்தது, தொடர் 1-1 என்று சமன் பெற்றது.
அயர்லாந்து அணியில் 30 வயது தொடக்க வீரர் ராஸ் அடைர் வெளுத்துக் கட்டினார். 58 பந்துகளில் 5 பவுண்டரிகளையும் 9 சிக்சர்களையும் பறக்க விட்டு 100 ரன்களை விளாசினார். ஆனால் ராஸ் அடெய்ருக்கு அதிர்ஷ்டக் காற்று ஒரு முறை அல்ல இருமுறை அல்ல 5 முறை அடித்தது. அதாவது தென் ஆப்பிரிக்கா பீல்டிங் மகா மோசம். இவருக்கு 5 வாய்ப்புகளை அளித்தனர். முதலில் 19 ரன்களில் இருந்த போது லிசாத் வில்லியம்ஸ் நோ-பால் வீச அங்கு ஸ்கொயர்லெக்கில் கேட்ச் ஆகியும் பயனில்லாமல் வாய்ப்பு பறிபோனது.
பிறகு 78 ரன்களில் இருந்த போது லிசாத் வில்லியம்ஸ் கையில் வந்த கேட்சை விட்டார் கேட்சை விட்டதோடு சிக்சராகவும் ஆனது. ரிக்கிள்டன் உடனடியாக ஒரு கேட்ச் வாய்ப்பைத் தவறான கணிப்பினால் விட நேர்ந்தது. அடுத்து ஒரு ரன் அவுட் வாய்ப்பு, மிக எளிதான வாய்ப்பு நழுவ விடப்பட்டது. பிறகு குரூகரே ஒரு கேட்ச் வாய்ப்பை விட்டார். இப்படியாக 57 பந்துகளில் சதம் விளாசினார் ராஸ் அடெய்ர்.
தொடக்க வீரரும் கேப்டனுமான பால் ஸ்டர்லிங் தன் பங்குக்கு 31 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக 13 ஓவர்களில் 137 ரன்களைக் குவித்தனர். லுங்கி இங்கிடி மட்டும் சிக்கனமாக வீசி 4 ஓவர்களில் 23 ரன்களுக்கு ஒரு விக்கெட் எடுக்க மற்ற பவுலர்களுக்கு அடி. வியான் முல்டர் 4 ஓவர்களில் 51 ரன்கள் விளாசப்பட்டார்.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் அதிரடி தொடக்க வீரர் ரிக்கிள்டன் 1 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 36 ரன்களையும் ரீசா ஹென்றிக்ஸ் 32 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 51 ரன்களையும் மேத்யூ பிரீட்ஸ்கே 41 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 51 ரன்களையும் விளாசி 12 ஓவர்களில் 121/2 என்று போட்டியை வெல்லும் நிலைக்குச் செல்ல 75% வேலையை செய்து முடித்தனர்.
ஆனால் அதன் பிறகு வந்த அய்டன் மார்க்ரம் (8) தொடங்கி அனைவரும் தொலைபேசி எண்கள் போல் 8,9,8, 5, 4, 0,0,3 என்று ஆட்டமிழக்க 64 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 185/9 என்று முடிந்தனர். பேட்டிங்கில் சதம் விளாசிய ராஸ் அடெய்ரின் சகோதரர் மார்க் அடெய்ர் இந்த சரிவைத் தொடங்கி வைத்து 4 விக்கெட்டுகளை அதிகபட்சமாகக் கைப்பற்றினார்.
மற்றொரு வலது கை வேகப்பந்து வீச்சாளர் கிரகாம் ஹியூம் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஆட்ட நாயகன் தொடர் நாயகன் விருதுகளை ராஸ் அடெய்ர் தட்டிச் சென்றார். மேலும் கடந்த 8 டி20 சர்வதேசப் போட்டிகளில் அபுதாபியின் ஜயீத் கிரிக்கெட் மைதானத்தில் முதலில் பேட் செய்து வெற்றி பெற்ற அணி என்பதையும் அயர்லாந்து சாதித்துள்ளது.
+ There are no comments
Add yours