சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 2-வது சீசன் வரும் நவம்பர்-8 தொடக்கம்

Spread the love

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 2-வது சீசன் வரும் நவம்பர் 5-ம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வளாகத்தில் உள்ள அரங்கில் தொடங்குகிறது. இந்த போட்டியை ஃபிடே ஆதரவுடன் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்துகிறது.

இம்முறை போட்டிகள் மாஸ்டர்ஸ், சாலஞ்சர்ஸ் என இரு பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. மாஸ்டர்ஸ் பிரிவில், சமீபத்தில் டபிள்யூ.ஆர் செஸ் மாஸ்டர்ஸ் கோப்பையை வென்ற உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி (2,797) 2-வது முறையாக கலந்து கொள்கிறார்.

அவருடன், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் லெவோன் அரோனியன் (2,738), பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ் (2,735), ஈரான் கிராண்ட் மாஸ்டர்களான பர்ஹாம் மக்சூட்லூ (2,719), அமீன் தபதாபேயி (2702), ரஷ்யா கிராண்ட் மாஸ்டர் அலெக்ஸி சரானா (2,717), இந்திய கிராண்ட் மாஸ்டர்களான விதித் குஜ்ராத்தி (2,726), அரவிந்த் சிதம்பரம் (2,698) ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இதில் அரவிந்ந் சிதம்பரம் தமிழகத்தின் மதுரை பகுதியை சேர்ந்தவர் ஆவார். கடந்த முறை இந்த தொடரில் பங்கேற்ற வீரர்களின் ரேட்டிங் சராசரி 2,711 ஆக இருந்தது. இது தற்போது 2,729 ஆக அதிகரித்துள்ளது. கிளாசிக்கல் முறையில் நடைபெறும் இந்த போட்டி 7 சுற்றுகளை கொண்டது. ஒவ்வொரு வீரரும் மற்ற போட்டியாளருடன் தலா ஒரு முறை மோதுவார். 7 சுற்றுகளின் முடிவில் அதிக புள்ளிகளை பெறும் வீரர் முதலிடம் பெறுவார்.

இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.70 லட்சம் ஆகும். மாஸ்டர்ஸ் பிரிவில் முதலிடம் பெறுபவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும். 2-வது இடத்தை பெறுபவர் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை பெறுவார். 3 முதல் 8 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.8 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.3.5 லட்சம், ரூ.2.5 லட்சம் வழங்கப்பட உள்ளது.

ஃபிடே சர்க்யூட்டில் இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் டி.குகேஷ் வெற்றி பெற்றிருந்தார். இந்த தொடரின் வாயிலாக அவர், பெற்ற புள்ளியானது கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற உதவியது. இந்த வெற்றி உலக சாம்பியனாவதை நோக்கமாக கொண்ட அவரது பயணத்தில் ஒரு முக்கிய படியாக அமைந்தது.

தொடர்ந்து கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ், வரும் நவம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்புசாம்பியனான சீனாவைச் சேர்ந்த டிங் லிரனை எதிர்த்து விளையாட உள்ளார். கடந்தாண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் குகேஷ் எந்த நிலையில் இருந்தாரோ அதே நிலையில் தற்போது அர்ஜுன் எரிகைசி உள்ளார்.இதனால் அவருக்கு இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அர்ஜுன் எரிகைசி, சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில் வெற்றி பெறும் பட்சத்தில் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில் இம்முறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சாலஞ்சர்ஸ் பிரிவில் ரவுனக் சத்வானி (2,659), அபிமன்யு புராணிக் (2,639), கார்த்திகேயன் முரளி (2,624), லியோன் மெண்டோன்கா (2,622), பிரணவ் (2,609), பிரனேஷ் (2,580), ஹரிகா துரோணவல்லி (2,493), ஆர்.வைஷாலி (2,486) ஆகிய 8 இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இதில் ஆர்.வைஷாலி, கார்த்திகேயன் முரளி, பிரணேஷ் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சாலஞ்சர்ஸ் பிரிவில் மொத்தம் ரூ.20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இதில் முதலிடம் பெறுபவருக்கு ரூ.6 லட்சம் பரிசுத் தொகை கிடைக்கும். 2-வது இடத்தை பிடிப்பவருக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும். 3 முதல் 8-வது இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.3.2 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1.6 லட்சம், ரூ.1.4 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.80 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டி தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செயலர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, போட்டி இயக்குநர் ஸ்ரீநாத் நாராயணன், கிராண்ட் மாஸ்டர் ஆர்.வைஷாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

டிக்கெட் விலை ரூ.100: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கூறும்போது, “இம்முறை சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியை நேரில் காண்பதற்கு ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். இதில் பல்வேறு செஸ் அகாடமிகளில் பயிற்சி பெற்று வரும் இளம் வீரர், வீராங்கனைகள் 500 பேரை இலவசமாக அனுமதிக்க உள்ளோம். மீதம் உள்ள 500 இடங்களுக்கு டிக்கெட் விநியோகிக்க உள்ளோம். டிக்கெட் விலை நூறு ரூபாய் என்ற அளவில் இருக்கும். இதை விற்பனை செய்யும் தளம் குறித்து விரைவில் தெரிவிப்போம்” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours