பாகிஸ்தான் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல், சச்சின் டெண்டுல்கர் மீதான தன் மரியாதையையும், அவர் கிரிக்கெட் மீதான தன் அபிமானத்தையும் நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
ஷார்ஜாவில் குளோ ஃபேன்ஸ் ஹை ஸ்கூல் கிரிக்கெட் கோப்பை அறிமுகத்தின் போது சயீத் அஜ்மல் கூறியதாவது: சச்சின் ஒரு கிரேட் கிரிக்கெட் வீரர். உலகிலேயே நேர்மையானவர் அன்பானவர், அவர் ஒரு லெஜண்ட், நான் அவரை சார் என்றுதான் அழைப்பேன். நான் அவருடன் சேர்ந்து ஆடியது எனக்கு உயரிய கவுரவமாகும். இத்தகு மரியாதைக்கும் புகழுக்கும் அவர் உரித்தானவரே.
கிரிக்கெட்டில் ‘சச்சின் சார்’ போன்ற வேறொருவர் இல்லை. அவரை நான் அவுட் செய்திருக்கிறேன், அது எனக்கு பெருமை வாய்ந்த மகிழ்ச்சித் தருணம். நான் அவருக்கு எதிராக ஆடும்போதெல்லாம், மனிதார்த்த உணர்வுடன் அவர் மீது மிக்க மரியாதையுடன் தான் விளையாடுவேன்.
நான் கோபப்பட்டதே இல்லை. சச்சினுடன் 2010-ல் லீக் ஒன்றில் ஆடினேன். தூஸ்ரா வீசி பீட்டர்சனை ஆட்டமிழக்கச் செய் என்று என்னிடம் சச்சின் கூறினார். நானும் தூஸ்ராவில் பீட்டர்சனை வீழ்த்தினேன், அவருக்கு மகிழ்ச்சித் தாளவில்லை. 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன். போட்டியில் இன்னும் 6 விக்கெட்டுகள் இருந்தன.
அப்போது சச்சின் என்னிடம் சீக்கிரம் முடித்து விட வேண்டாம் என்றார். சச்சினுக்கு எப்போதுமே எங்கள் மீது மரியாதை உண்டு. அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரைப் பார்ப்பது அபூர்வம்.
இவ்வாறு கூறினார் சயீத் அஜ்மல். 35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும் 113 ஒருநாள் போட்டிகளில் 184 விக்கெட்டுகளையும் 64 டி20 சர்வதேசப் போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2009-ல் அறிமுகமான இவர் 2015 வரை பாகிஸ்தானுக்கு மூன்று வடிவங்களிலும் ஆடினார். ஆனால் இவர் 1995/96 முதலே முதல்தர கிரிக்கெட்டில் ஆடிவந்தார் 2009-ல் தான் பாகிஸ்தான் அணியில் நுழைய முடிந்தது. பிறகு இவர் த்ரோ செய்கிறார் என்று புகார் எழுந்து திருத்தப்பட்ட ஆக்ஷனில் பவுலிங் செய்யத் தொடங்கிய போது இவரால் பழைய பாணியில் அச்சுறுத்தலாக வீச முடியாமல் சாத்து வாங்கத் தொடங்கினார். மெல்ல இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்வும் முடிவுக்கு வந்தது.
+ There are no comments
Add yours