பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்ஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஆண்களுக்கான டி63 உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிலிருந்து தமிழக வீரர் மாரியப்பன், ஷரத் குமார், சைலேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி ஷரத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். அமெரிக்காவின் ஃப்ரெச் எஸ்ரா 1.94 மீட்டருடன் தங்கத்தை தட்டிச் சென்றார்.
2016-ம் ஆண்டு பாராலிம்பிக் தொடரில் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். தொடர்ந்து 2020 டோக்யோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து தற்போது நடப்பு பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் பாராலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் மாரியப்பன்.
+ There are no comments
Add yours