வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா- ஜிம்பாப்வேயுடன் இன்று மூன்றாவது டி 20.

Spread the love

ஹராரே: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துவிளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 13ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என சமநிலையை அடைந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3-வது ஆட்டத்தில் ஹராரே நகரில் இன்று மோதுகின்றன.

டி 20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் விளையாடும் லெவனில் மாற்றங்கள் இருக்கக்கூடும். தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் அணிக்கு திரும்பி உள்ளதால் அபிஷேக் சர்மாவின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2-வது ஆட்டத்தில் 46 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய அபிஷேக் சர்மா அநேகமாக இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும். இந்த சூழ்நிலை உருவானால் ஷுப்மன் கில் 3-வது வீரராக விளையாடக்கூடும். மாறாக ஷுப்மன் கில் தொடக்க வீரராக தொடர விரும்பினால் அவருடன் அபிஷேக் சர்மா அல்லது ஜெய்ஸ்வால் ஆகியோரில் யாரேனும் ஒருவர் இணைந்து ஆட்டத்தை தொடங்கக்கூடும்.

ஜெய்ஸ்வால் 17 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரை சதங்கள் அடித்துள்ளார். அவரது ஸ்டிரைக்ரேட் 161 ஆக உள்ளது. சாய்சுதர்சன் நீக்கப்பட்டுள்ளதால் அவரது இடத்தை ஜெய்ஸ்வால் நிறைவுசெய்வார். துருவ் ஜூரெல் இடத்தில் விக்கெட் கீப்பராக சஞ்சுசாம்சன் களமிறங்குவார் அதேவேளையில் ரியான் பராக் இடத்தில் ஷிவம் துபே விளையாடக்கூடும்.

ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் இந்த தொடரில் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் 115 ரன்களே சேர்த்த போதிலும் வெற்றி கண்ட அந்த அணி 2-வது ஆட்டத்தில் 235 ரன்கள் இலக்கை துரத்திய நிலையில்134 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் பவுன்ஸ் கிடைக்கும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் ஆடுகளத்தில் இந்திய வீரர் ரவி பிஷ்னோய் கூட்டாக 2 ஆட்டங்களில் 8 ஓவர்களை வீசி 24 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். 20 முதல் 22 பந்துகளை கூக்ளியாக வீசும் திறன் கொண்ட ரவி பிஷ்னோய் தனது வேகத்தை சிறந்த முறையில் மாற்றி அமைத்து வீசுவது நல்ல பலன்களை தருகிறது. மீண்டும் ஒரு முறை அவர், ஜிம்பாப்வே அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் தரக்கூடும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours