இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘ஸ்ட்ரிக்ட் மாஸ்டர்’ கவுதம் கம்பீர் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி வரும் 2027-ம் ஆண்டு வரை பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
42 வயதான கவுதம் கம்பீர் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். சேவாக், சச்சின், யுவராஜ், தோனி போன்றவர்கள் இடம்பெற்ற இந்திய அணியில் விளையாடியவர். இந்திய அணிக்காக 242 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 10,324 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முறையே 75 மற்றும் 97 ரன்கள் எடுத்தவர். இந்திய கிரிக்கெட் வீரராக இரண்டு உலகக் கோப்பையை வென்றவர். ஐபிஎல் அரங்கில் கேப்டன் மற்றும் ஆலோசகராக பட்டங்களை வென்றவர்.
இப்படி பல சாதனைகளை கம்பீர் படைத்துள்ளார். இருந்தாலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு அவர் எந்த அளவுக்கு சரிவருவார் என்ற கேள்வியும் எழுகிறது. அது குறித்த விரைவு அலசல் இது…
ஒழுக்கசீலர்: கிரிக்கெட் விளையாட்டில் டிசிப்ளினாக இயங்கும் நபர்களில் ஒருவர் கம்பீர். பெரும்பாலான வீரர்கள் இதனை தங்களது ஆட்டங்களில் கடைப்பிடிப்பார்கள். ஆனால், கம்பீர் அவர்களுக்கு எல்லாம் முன்னவராக நிற்பவர். அதில் தவறு ஏதும் இல்லை. சமயங்களில் இந்த ஒழுக்கம் சங்கடங்களை தரும். அணியின் பயிற்சியாளராக பயணிக்கும் போது சில சவால்கள் இருக்கும். பலதரப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட வீரர்கள் இருப்பார்கள். சீனியர், ஜூனியர் என இருப்பார்கள். அவர்களை அனுசரித்து போக வேண்டி இருக்கும். அதனை கம்பீர் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏனெனில் கிரேக் சேப்பல், அனில் கும்ப்ளே போன்றவர்கள் இந்திய பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து இதன் காரணமாக எக்ஸிட் ஆனவர்கள். இந்த மாதிரியான வீரர்களுக்கு சிறந்த நிர்வாக திறன் கொண்டவர்கள்தான் தேவை. ஒரு மேனேஜர் போல இருக்க வேண்டும். அதாவது ரவி சாஸ்திரி போல. அனைவரையும் திறன்பட ஹேண்டில் செய்தார். அதையே கம்பீரும் செய்ய வேண்டும். இதுவரையிலான அவரது செயல்பாடு அப்படி இல்லை என தெரிகிறது.
வாகை சூடுவாரா? – கம்பீர் தொட்டதெல்லாம் பொன் தான் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஐபிஎல் 2024 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு சமூக வலைதளங்களில் போற்றப்படுகிறார். அவர் கேப்டனாகவும் இரண்டு முறை அந்த அணிக்கு பட்டம் வென்று கொடுத்துள்ளார். ஆனால், ஏழு ஆண்டுகள் அந்த அணியில் அவர் விளையாடி உள்ளார். 2024 சீசனில் அந்த அணியின் நாயகர்களாக களத்தில் வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தியும் இருந்தனர். பயிற்சியாளர்களில் ஒருவராக அபிஷேக் நாயர் இருந்தார். அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் சந்திரகாந்த் பண்டிட் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2018 சீசனில் டெல்லி ஐபிஎல் அணியுடனான கம்பீரின் பயணம் அந்த அளவுக்கு சிறப்பானதாக அமையவில்லை. அது ஒரு டிசாஸ்டர் என்றும் சொல்லலாம். லக்னோ அணியிலும் ஆலோசகராக கம்பீர் செயல்பட்டுள்ளார். அதே நேரத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டையும், சர்வதேச கிரிக்கெட்டையும் ஒப்பிட முடியாது. மேலும், பயிற்சியாளர் என்ற ரோல் கம்பீருக்கு எப்படி செட் ஆகிறது என்பது போகப்போகத்தான் தெரியும்.
பயிற்சியாளராக போதிய அனுபவம் இல்லை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கம்பீரின் கவனம் அரசியல் பக்கமாக திரும்பியது. 2019 முதல் 2024 வரையில் கிழக்கு டெல்லியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். ஐபிஎல் களத்தில் 2022 மற்றும் 2023 சீசனில் லக்னோ, 2024 சீசனில் கொல்கத்தா அணியில் ஆலோசராக (Mentor) இருந்தார். அது தான் பயிற்சி சார்ந்து அவரது அனுபவம்.
ஆனால், முன்னாள் பயிற்சியாளர் ராகுல் திராவிட், இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக இருந்தவர். அந்த நேரத்தில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இன்றைய இந்திய அணியில் (சீனியர்) இடம்பெற்றுள்ள பல வீரர்கள் அவரது வளர்ப்பு தான். அதன் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பணியாற்றினார். இந்த நிலையில்தான் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆனார். வெற்றி பெறுகின்ற தருணங்களில் கண்டுகொள்ளப்படாமலும், தோல்வியை தழுவும் போது விமர்சனம் வைப்பதும் பயிற்சியாளர் மீதுதான். அதனை கம்பீர் சமாளிக்க வேண்டும்.
கோலி – கம்பீர் மோதல்: விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் என இருவரும் டெல்லியை சேர்ந்தவர்கள் தான். ஆனால், அவர்கள் எப்போதுமே நீரும் நெருப்புமாக இருந்துள்ளார்கள். 2013-ல் ஐபிஎல் போட்டியின் போது வீரர்களாக இருந்த இவரும் காரசார வார்த்தை போரில் ஈடுபட்டனர். கடந்த 2023 சீசனில் லக்னோ அணியின் பயிற்சியாளராக கம்பீர் இருந்த போதும் ஆர்சிபி வீரர் கோலியுடன் மல்லுக்கு நின்றார். இது நிச்சயம் பல கேள்விகளை எழுப்புகிறது.
ஏனெனில், இப்போதைக்கு இருவருக்கும் இடையே எரிமலையில் ஈரத்துணி போட்டது போன்ற நிலை உள்ளது. ஆனால், அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அதுவே சில கிரிக்கெட் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரிடம் இருந்த அந்த ஸ்பார்க்கை இந்திய அணிக்கு ஓரளவு வரம்புக்குள் கட்டுப்பாட்டுடன் பரப்பினால் போதுமானது. அது நடந்தால் பயிற்சியாளராக அவரது இந்தப் பயணம் இனிதானதாக அமையும்.
+ There are no comments
Add yours