துபாய்: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இன்று மோதுகிறது.
9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்குகிறது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. அதேவேளையில் நியூஸிலாந்து அணி 2009, 2010-ம் ஆண்டு தொடர்களில் இறுதிப் போட்டியில் கால்பதித்து இருந்தது. இதில் முதல் முறை ஆஸ்திரேலியாவிடமும், 2-வது முறை இங்கிலாந்திடமும் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தது நியூஸிலாந்து அணி.
இந்திய அணியின் பேட்டிங்கில் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா,ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகியோர் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக உள்ளனர். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். மந்தனா கடைசியாக விளையாடிய 5 டி20 ஆட்டங்களில் 3 அரை சதங்கள் அடித்துள்ளார்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் ரேணுகா சிங், பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி ஆகியோர் வேகப்பந்து வீச்சு வீராங்கனைகளாகவும் தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா, ராதா யாதவ் ஆகியோர் சுழற்பந்து வீச்சு வீராங்கனைகளாகவும் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூஸிலாந்து அணியில் அனுபவம் மற்றும் இளம் வீராங்கனைகள் கலவையாக இடம் பெற்றுள்ளனர். கேப்டன் சோபி டிவைன், ஆல்ரவுண்டர்களான சுசி பேட்ஸ், அமேலியா கெர், வேகப்பந்து வீச்சு வீராங்கனை லீ தஹுஹு, லே காஸ்பெரெக் ஆகியோர் பலம் சேர்க்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர். முன்னதாக பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன.
+ There are no comments
Add yours