ஷார்ஜா: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடம் பெற்றுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். தொடக்க நாளான இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணியை சந்திக்கிறது.
ஸ்காட்லாந்து முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் அறிமுகமாகிறது. அந்த அணி பயிற்சி ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்திருந்தது. அதேவேளையில் இலங்கையிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்தது. வங்கதேச அணி பயிற்சி ஆட்டத்தில் இலங்கையிடம் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதுவரை வங்கதேச அணிக்கு எதிராக 4 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து விளையாடி உள்ளது. இதில் ஒன்றில் கூட அந்த அணி வெற்றி பெற்றது இல்லை.
6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 5-ம் தேதி இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்த டி20 கிரிக்கெட் திருவிழாவில் இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்குகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை (4-ம் தேதி) நியூஸிலாந்துடன் மோதுகிறது. அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 6-ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது. தொடர்ந்து இலங்கை அணியுடன் 9-ம் தேதியும், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் 13-ம் தேதியும் மோதுகிறது இந்திய அணி.
இதுவரை நடைபெற்றுள்ள 8 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஒரே ஒரு முறை மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. 2020-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது.
இம்முறை போட்டி நடைபெறும் ஷார்ஜா மற்றும் துபாய் மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை. இதனால் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பேட்டிங்கில் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் ஆகியோர் வலுவானவர்களாக திகழ்கின்றனர்.
இந்திய அணி விவரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், அருந்ததிரெட்டி, ரேணுகா சிங் தாக்குர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், எஸ்.சஜீவன். மாற்று வீராங்கனைகள்: உமா சவுத்ரி, தனுஜா கன்வர், சைமா தாக்குர்.
பரிசுத் தொகை: மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையை ஐசிசி இரு மடங்காக உயர்த்தி உள்ளது. இதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.19.6 கோடி வழங்கப்படும். கடந்த 2023-ம் ஆண்டு தொடரில் ரூ.8.4 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. 2-வது இடத்தை பெறும் அணி ரூ.9.8 கோடியை பெறும். அரை இறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா ரூ.5.7 கோடி வழங்கப்பட உள்ளது. 5 முதல் 8-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.2.25 கோடியும், 9-வது மற்றும் 10-வது இடத்தை பிடிக்கும் அணிகள் தலா ரூ.1.13 கோடியையும் பெறும்.
+ There are no comments
Add yours