சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார்.
14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 6 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன. இதனால் இருவரும் 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
இந்நிலையில் ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் இன்று (7-ம் தேதி) 10-வது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. இன்றைய சுற்று உட்பட மொத்தம் 5 சுற்றுகளே மீதம் உள்ளது. முதலில் எந்த வீரர் 7.5 புள்ளிகளை எட்டுகிறாரோ அவர், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். லிரென் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு மேற்கொண்டு 3 புள்ளிகள் தேவையாக உள்ளது. அதேவேளையில் முதன்முறையாக பட்டம் வெல்வதற்கு குகேஷுக்கும் மேற்கொண்டு 3 புள்ளிகள் தேவை.
+ There are no comments
Add yours