சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிப்ட்சன், தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அவரது புகாரில் சவுக்கு சங்கர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
‘சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜா மீது அவதூறு பரப்பும் வகையில் அவருக்கும், விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்துக்கும் தொடர்பு இருப்பதாக ட்விட்டர் எக்ஸில் பதிவிட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் என்பவரின் தூண்டுதலின் பேரில் செயல்படும் வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர், வாய்ஸ் ஆப் சவுக்கு என்ற அடையாளம் கொண்ட சவுக்கு சங்கர், திராவிட முன்னேற்றக் கழகத்தின், நல்ல முறையில் பணியாற்றி வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய அவதூறுகளை பரப்பி களங்கம் ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அன்பு ஜோதி ஆசிரமம் குறித்து காவல் ஆய்வாளர் விசாரித்தும், அதனை தொடர்ந்து தேசிய மக்கள் நல ஆணையர் விசாரித்த அறிக்கையிலும், எந்த இடத்திலும் சட்டமன்ற உறுப்பினர் ராஜா பெயர் இடம் பெறவில்லை. சாட்சிக்காகக் கூட விசாரணை செய்யவில்லை.
எனவே நல்ல முறையில் செயல்பட்டு வரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா மீது அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசியல் ஆதாயம் தேடும் நபர்களை தூண்டிவிட்டு அதன் மூலம் பொய் புகார் கொடுத்து பணம் பறிக்கும் வகையில் அவதூறு பரப்பும் செயலில் சவுக்கு சங்கர் ஈடுபட்டு வருகிறார்.
தொடர்ந்து இரண்டு ஆண்டு காலமாக தமிழகத்தில் மதிப்புமிக்க நபர்கள் மீது இதுபோன்ற அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஒரு விதமான பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறார். ஆகவே சவுக்கு சங்கர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து சமூகத்தினை பாதுகாக்க வேண்டும் என்று அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours