வேலைநிறுத்த அறிவிப்பைக் கைவிட வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு துறையின் அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உரிய காலத்தில் முடிக்கப்படவில்லை. தொழிலாளர்களை நிர்கதியாக நிற்கவைத்ததோடு, எந்த கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிபொறுப்பேற்ற பிறகுதான் தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் சீர்குலைக்கப்பட்ட ஊதிய விகிதம், மீண்டும் சீரமைக்கப்பட்டு “பே மேட்ரிஸ்” விகிதப்படி ஊதியம் வழங்கப்படுகிறது. 5 சதவீதம் அளவுக்கு ஊதியமும் உயர்த்தப்பட்டது. இவை அனைத்தும் எந்த போராட்டமும் நடத்தாமல், எந்த ஒடுக்குமுறையையும் சந்திக்காமல் தொழிலாளர்களுக்கு கிடைத்தவை.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை எவ்வளவு சீரழிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால், மகளிர் கட்டணமில்லா பயணத்துக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.2,800 கோடி ஒதுக்கி, டீசல் மானியமாக ரூ.2,000 கோடியும், மாணவர் இலவச பயணத்துக்காக ரூ.1,500 கோடியும் ஒதுக்கீடு செய்தவர் நம் முதல்வர். யாரும் கோரிக்கை வைக்காமலேயே தீபாவளி போனஸை மீண்டும் 20 சதவீதமாக உயர்த்தி ரூ.16,800 வழங்கியவர் நம் முதல்வர்தான்.
பேரிடர் நேரத்தில் உடனடியாக களம் இறங்கி பேருந்துகளை வழக்கம்போல் இயக்கி, மக்கள் இயல்புநிலைக்குவர முன்நின்றவர்கள் போக்குவரத்து துறை தொழிலாளர்கள். அதேபோல தொழிற்சங்கங்களும் முதல்வருக்கும், பொதுமக்களுக்கும் இந்த பேரிடர் நேரத்தில் உறுதுணையாக நிற்க அன்போடு வேண்டுகிறேன்.
எனவே, பணியில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதையும், பொங்கல் விடுமுறைக்குப் பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எனவே போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும்தொழிலாளர்கள் இதனை கருத்தில் கொண்டு போராட்ட அறிவிப்பை கைவிட அன்போடு வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours