பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மாற்றுவதற்கு முயற்சிப்பது அதிகார வரம்பை மீறியது மட்டுமல்ல, சட்ட நெறிமுறைகளையும் மீறிய செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருப்பதாவது..
“பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் உருவாக்கிய உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1-ல், “இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு ‘பாரத்’ என்பதை மட்டுமே அதிகாரபூர்வ பெயராக மாற்ற முடிவு செய்தால், அவர்கள் அரசியலமைப்பின் 1-ஆவது பிரிவைத் திருத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும்.
குறிப்பாக 368-ஆவது பிரிவு, அரசியலமைப்பு சட்டத்தை ஒரு சாதாரண பெரும்பான்மை திருத்தம் அல்லது சிறப்பு பெரும்பான்மை திருத்தம் மூலம் திருத்த அனுமதிக்கிறது.
அரசியலமைப்பின் பிரிவு 1-இல் மாற்றம் கொண்டுவருவது உட்பட அரசியலமைப்பின் மிகமுக்கிய மாற்றங்களுக்கு, அவையில் இருக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் சிறப்புப் பெரும்பான்மை (66 விழுக்காடு) தேவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்றால், அவையில் 66 விழுக்காடு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இரு அவைகளிலுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து வரும் ஒன்றிய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வராமலேயே இந்தியாவின் பெயரை பாரத் என்று நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது.
தற்போது என் சி.இ.ஆர்.டி ,பள்ளிப் பாட புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு முயற்சிப்பது அதன் அதிகார வரம்பை மீறியது மட்டுமல்ல, சட்ட நெறிமுறைகளையும் மீறிய செயலாகும். கடும் கண்டனத்திற்குரிய இந்தப் பரிந்துரையை ஏற்கக் கூடாது” என வைகோ தெரிவித்துள்ளார்
+ There are no comments
Add yours