திருச்செந்தூர் கோயிலில் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

Spread the love

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், சிறப்பு தரிசன கட்டணம் மட்டுமே ரூ.800-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மற்றபடி வேறு எந்த கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு தரிசன கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும், சிறப்பு தரிசன கட்டணம் என பொதுமக்களிடம் ஆயிரம் ரூபாய் வசூலித்து, தரிசன சீட்டு கொடுக்காமல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.

அந்த வீடியோவில், சிறப்பு தரிசன பாதையில், அலுவலர் ஒருவர் நின்று, பக்தர்களிடம் ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு, தரிசன சீட்டு வழங்காமல் பக்தர்களை தரிசன பாதையில் உள்ளே அனுப்புவது போன்று பதிவாகி இருந்தது. மேலும், அந்த வீடியோவை எடுத்துக்கொண்டே பேசிய நபர், ‘கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு, தரிசன சீட்டு கொடுக்காமல் தரிசனத்துக்கு அனுப்புகிறார்கள்.

இது என்ன கணக்கு என்று புரியவில்லை’ என பேசியபடி வீடியோவை பதிவு செய்திருந்தார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டவர் மீது திருச்செந்தூர் காவல் நிலையத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், ‘ரூ.1000 கட்டண தரிசன வரிசையில் பணி செய்யும் சிறப்பு அலுவலர் நுழைவு சீட்டு வழங்குவதை முற்றிலும் மறைத்து, அலுவலர்கள் பணம் வாங்குவதை மட்டும் ஒரு கோணத்தில் வீடியோ எடுத்துள்ளனர்.

எனவே,சமூக வலைதளத்தில் பொய் தகவலை பரப்பியதாக திருச்செந்தூரை சேர்ந்த பிருதிவி ராஜ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்செந்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறும்போது, ‘‘கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான், விஸ்வரூப தரிசன கட்டணம்ரூ.500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், அபிஷேக கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், அறங்காவலர் குழு முடிவின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்டு, ரூ.800ஆக இருந்த சிறப்பு தரிசன கட்டணம், இந்தாண்டு முதல் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

அதேநேரத்தில், ரூ.100 சிறப்பு தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் மாற்றம் இல்லை. திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால்தான், விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக,ஆயிரம் ரூபாய் கட்டணத்திற்கான சிறப்பு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. மற்றபடி, எந்த கட்டண உயர்வும் இல்லை. தரிசன கட்டணம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இதனிடையே அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘திருச்செந்தூர் கோயிலில் நீர்தேக்கத் தொட்டி, துணை மின் நிலையம்,கலையரங்க கட்டிடம், முடி காணிக்கை மண்டபம், சூரசம்ஹார மண்டபம், அன்னதான மண்டபம்உள்பட 16 பணிகள் ரூ.206.45 கோடிசெலவில் உபயதாரர் நிதியில் நடைபெற்று வருகின்றன. அதேபோல, திருமண மண்டபம், குடில்கள், வணிக வளாகம், பக்தர்கள் தங்கும் வளாகம், புதிய பேருந்து நிலையம் உட்பட 13 பணிகள் ரூ.99.90 கோடி செலவில் கோயில் நிதியில் நடைபெற்று வருகிறது’ என தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours