திமுக கொடுத்த மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு ரேஷன் கார்டுகளில் இருந்து ஒருவர் வீதம் என கணக்கிடப்பட்டது.
விண்ணப்ப முகாம்கள் :
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் கொடுக்கப்பட்டது. ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை முதற்கட்டமாகவும், ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும், அடுத்து சிறப்பு முகாம்கள் மூலமாகவும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டன. கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வரையில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
1.06 கோடி விண்ணப்பங்கள் ஏற்பு :
இதில் செப்டம்பர் 5 வரையில் ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 56.5 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
குறுஞ்செய்தி :
இதன்படி பார்த்தால் சுமார் 65 சதவீதம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 35 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, எந்தெந்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறித்த குறுஞ்செய்தியானது அந்தந்த குடும்ப தலைவிகளின் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு :
மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தலைவிகளுக்கு செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் மகளிர் உரிமை தொகையான மாதம் 1000 ரூபாய் தொகையானது வந்து சேரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி தகுதி இருந்தும் உரிமை தொகை கிடைக்கப்பெறாமல் இருக்கும் நபர்களுக்கு மேல்முறையீடு வசதியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி வராத மகளிர் தங்கள் பகுதியில் உள்ள இசேவை மையத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனவும், இந்த விண்ணப்பங்கள் வருவாய் கோட்டாட்சியரிடத்தில் அனுப்பப்பட்டு பின்னர் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் சிறப்பு செயலாக்கத்துறை அறிவித்துள்ளது.
30 நாட்கள் :
குறுஞ்செய்தி வராத 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், மேல்முறையீடு செய்த 30 நாட்களில் அதற்கான நடவடிக்கை எடுக்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இணையவழி வாயிலாக மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours