ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி.. காத்திருப்போர் பட்டியலில் 2 ஐ.பி.எஸ் அதிகாரிகள்..

Spread the love

ஞாயிற்றுக்கிழமை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில் அது சம்பந்தமாக 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அன்றைய தினம் பெய்த கனமழையால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தண்ணீர் பெருமளவு தேங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் ஒதுங்கக்கூட இடம் இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனால் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான், நிகழ்ச்சி வேறொரு நாளில் நடக்கும் என அறிவித்தார்.

அந்த வகையில் நேற்று முந்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் மறக்குமா இசை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த முறை மழையில் சிக்கிய ரசிகர்களுக்கு இம்முறை மழை பெய்தால் தற்காத்துக்கொள்ள ரெயின்கோட் வழங்கப்பட்டது. இதனால் பெரும் ஆர்வமுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கு காரணம் அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள்தான்.

டிக்கெட் விற்பனை முதல் பார்க்கிங் வரை அனைத்துமே குளறுபடியான நிலையில் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும் கிழக்கு கடற்கரை சாலை முழுவதுமே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியை கடக்க சுமார் 3 முதல் 4 மணிநேரமானது. இப்படி இருக்கும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார் டிஜிபி சங்கர் ஜிவால்.

இது தொடர்பான செய்திக்குறிப்பில், ”சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பனையூர் பகுதியில் 10.09.2023 அன்று மாலை நடைபெற்ற இசைக் கச்சேரியின் போது அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டமும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இது தொடர்பாக விரிவான விசாரணை செய்ய தாம்பரம் காவல் ஆணையருக்கு தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகமான கூட்டத்திற்கான காரணங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், மருத்துவ வசதிகள், நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் இந்நிகழ்ச்சி தொடர்பாக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாத வண்ணம் தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் காவல் துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற குளறுபடி மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் நேற்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையர் திசா மிட்டல் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours