நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி நேற்று உயிரிழந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவி தனக்கு பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் 13 பேருக்கு ட்ரீட் கொடுப்பதற்காக ஷவர்மா வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி கலையரசிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ஷவர்மாவை விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் நகரில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவரது தாயார் சுஜாதா, மாமா, அத்தை மற்றும் தம்பி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், நாமக்கலில் நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன்படி, உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? ப்ரீசர் பெட்டிகள் உள்ளதா? என கண்காணிக்க வேண்டும் என்றும் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத, தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
அதன்படி, அரியலூரில் உள்ள பல்வேறு உணவகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் காலாவதியான 55 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர். உணவுப்பொருள்களை முறையாக பராமரிக்குமாறும், உணவகங்களை தூய்மையாக வைத்திருக்கவும் உணவகத்தின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அமைச்சரின் உத்தரவின் பேரில் நாமக்கலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த ஆய்வில் சுகாதார குறைபாடு உள்ள 10 உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours