சி.ஏ.ஜி. அறிக்கையை சுட்டிக்காட்டி பா.ஜனதா அரசு மீது 7 ஊழல் குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மத்திய அரசு துறைகளில் ரூ.7½ லட்சம் கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
திருவாரூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் 4 நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றிருந்தார். திருக்குவளையில் நடந்த விழாவில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை கடந்த 25-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் 4 மாவட்ட அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார். திருமண விழா திருவாரூரில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைப்பயிற்சி சென்றார். அப்போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவாரூர் பவித்திரமாணிக்கத்தில் நாகப்பட்டினம் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. எம்.செல்வராஜ் இல்ல திருமணம் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். Also Read – மூதாட்டியிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது விழாவில் அவர், பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம். இந்தியாவை காப்பாற்றுவதற்காக ‘இந்தியா’ என்ற கூட்டணியை ஏற்படுத்தி உள்ளோம். இந்த கூட்டணி உருவாகுவதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் இந்த கூட்டணி காரணமாக இருக்கிறது என்ற ஆத்திரம் பிரதமர் மோடிக்கு வந்துவிட்டது. அதனால்தான் எங்கு சென்றாலும் இந்த கூட்டணியை பற்றி விமர்சனம் செய்து பேசிக்கொண்டிருக்கிறார்.
குறிப்பாக தி.மு.க.வை பற்றி அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் ஊழல் வந்துவிட்டதாம். அந்த ஊழலை ஒழித்தே தீருவேன் என்று தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறார். ஊழலைப் பற்றி பேசுவதற்கு மோடிக்கு யோக்கியதை உண்டா?. ஊழலை பற்றி பேசுவதற்கு பா.ஜ.க.வுக்கு என்ன தகுதி இருக்கிறது?. உங்களுடைய வண்டவாளங்களை எல்லாம் இப்போது சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கை குழு ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளது. ஒன்றியத்தில் நடைபெறும் பா.ஜ.க. ஆட்சி – ஊழல் ஆட்சி, முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி, லஞ்ச லாவண்யம் பெருத்துப்போன ஆட்சி என சி.ஏ.ஜி. ஆய்வறிக்கை கூறுகிறது.
7 திட்டங்களில் ஊழல் பாரத்மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாதை கட்டுமான திட்டம், சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டு திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், எச்.ஏ.எல். விமான வடிவமைப்பு திட்டம் ஆகிய 7 திட்டங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என அந்த அறிக்கை தெளிவாக சொல்லி இருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 99999 99999 என்ற ஒரே போலி செல்போன் எண்ணில் 7½ லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு ஊழல் நடந்திருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற நோயாளிகளில் 88 ஆயிரத்து 760 பேர் இறந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் இறந்த பிறகும் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறி 2 லட்சத்து 14 ஆயிரத்து 923 காப்பீட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
இருமடங்கு நிதி இதன்மூலம் தகுதியில்லாத குடும்பங்களை பயனாளிகளாக சேர்த்து சுமார் 22 கோடியே 44 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருக்கிறது. துவாரகா விரைவு நெடுஞ்சாலை திட்டத்தில், ஒரு கிலோ மீட்டருக்கு 18 கோடி ரூபாயாக இருந்த செலவு 250 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. திட்ட மதிப்பை விட, 278 மடங்கு கூடுதல் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அயோத்தியில் ராமாயணம் தொடர்புடைய இடங்களை நவீனப்படுத்தும் திட்டத்தில் விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரர்களுக்கு சலுகைகள் தரப்பட்டதன் மூலம் அரசுக்கு 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பாரத்மாலா திட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு நெடுஞ்சாலை அமைக்க நிர்ணயித்ததை விட இருமடங்கு அதிகமாக நிதி வழங்கப்பட்டிருக்கிறது. ரூ.7½ லட்சம் கோடி ஊழல் நாடு முழுவதும் உள்ள சுமார் 600 சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச்சாவடிகளை சி.ஏ.ஜி. ஆய்வு செய்துள்ளது.
அதில் விதிகளுக்குப் புறம்பாக, 132 கோடியே 5 லட்சம் ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலித்திருப்பது தெரியவந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பரனூர் சுங்கச்சாவடியும் இதில் ஒன்று. இந்த ஒரே ஒரு சுங்கச்சாவடியில் மட்டும் 6½ கோடி ரூபாய் முறைகேடாக வசூலித்திருக்கிறார்கள். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமான எந்திர வடிவமைப்பில் 159 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஓய்வூதிய திட்ட பணத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். சி.ஏ.ஜி. அறிக்கையின்படி ஒன்றிய அரசு துறைகளில் 7½ லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது.
அமித்ஷா கவலை ஊழலை பற்றி அமித்ஷா அதிகம் கவலைப்படுகிறார். மத்திய ஊழல் கண்காணிப்பகம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், ஒன்றிய அமைச்சகங்களிலேயே உள்துறை அமைச்சக அதிகாரிகள் – அலுவலர்கள் மீதுதான் கடந்த ஆண்டு அதிகமான ஊழல் புகார்கள் பதிவாகி இருக்கிறது கூறப்பட்டு உள்ளது. ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு எதிராக, கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 புகார்கள் பதிவாகி இருக்கிறது. இதில் உள்துறை அதிகாரிகள் மீது மட்டும் 46 ஆயிரத்து 643 புகார்கள் பதிவாகி இருக்கிறது. அஞ்ச மாட்டோம் இவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகிறோம் என இன்றைக்கு பேசி கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்த தவறை தி.மு.க. பேசுகிறதே என ஆத்திரப்பட்டு நம்மை பழி வாங்குவதற்காக சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மூலம் மிரட்டி பார்க்கிறார்கள். இதையெல்லாம் கண்டு அஞ்சி நடுங்குகிற கட்சி தி.மு.க. அல்ல. தி.மு.க என்பது பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு எல்லாம் நாங்கள் அஞ்சி விட மாட்டோம்.
தங்களுடைய லஞ்ச லாவண்யங்களை மூடி மறைப்பதற்காக மதவாதத்தை கையில் எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல, இந்தியாவையும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.
+ There are no comments
Add yours