சென்னை: பிராமணர்களை இழித்து பேசும் தி.மு.க., வினர் மீது முதல்வர் ஸ்டாலின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறி உள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், பிராமண சமூகத்தின் மீதான அவதூறு பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து சமுதாய தலைவர்கள், தமிழக பிராமண சமூகத்தினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஒய்.ஜி.மதுவந்தி பேசியதாவது: பிராமண சமுதாயம் ஒரு பெரிய சமுதாயம். எல்லாரும் ஒன்று சேர வேண்டும். இந்த சமுதாயத்தை கொச்சைப்படுத்தி பேச வேண்டியது கிடையாது. ஒரு படம் எடுத்தால் அதில் ஒருத்தர் ஒரு சமுதாயத்தில் இருந்து வருகிறார் என்றால் அதை தைரியமாக சித்தரித்து சொல்ல வேண்டும்.
அவ்வளவு பெரிய ராணுவ அதிகாரியை பற்றி படம் (அமரன்) எடுக்கிறீர்கள். அவர் ஒரு பிராமணர் என்று காட்டுவதில் உங்களுக்கு என்ன கேடு? யாரை பார்த்து பயப்படுகிறீர்கள்? திரைத்துறையில் நான் இருந்து கொண்டே தான் இதை கேட்கிறேன். மற்ற சமுதாயத்தை பற்றி நேரிடையாக சொல்கிறீர்கள்? பிராமணர் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்? பயத்தை போக்கி தைரியமாக களத்தில் இறங்குங்கள்.
நடிகை கஸ்தூரி: காஷ்மீரில் நடப்பது மட்டும் இனப்படுகொலை அல்ல. ஒருத்தர் உணர்வை, சமுதாயத்தை அழிப்பதும் இனப்படுகொலை தான். பிறப்பில் இருந்து இறப்பு வரை முக்கியமான அங்கமாக இருக்க வேண்டியது இந்த குலம். கைபர் கணவாய் வழியாக வந்தவர்களை பற்றி பேசினால் உங்கள் ஓட்டு தான் குறையும்.
தமிழ்நாடு பிராமணர் சங்க (தாம்ப்ராஸ்) மாநில தலைவர் என். நாராயணன்: சமீபகாலமாக பிராமண துவேஷம் என்பதை நாம் பொறுத்துக் கொண்டு வந்தோம், சகித்துக் கொண்டு வந்தோம். இப்போது லக்ஷமண் ரேகை என்ற எல்லை கோட்டை அது தாண்டிவிட்டதால் நாமும் களம் இறங்கி இருக்கிறோம்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 400க்கும் அதிகமான கிளைகளை நிறுவியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் பிராமணர்கள் ஒற்றுமை அருமையாக இருக்கிறது. பிராமணர்களை கோழை என்றோ பலஹீனம் ஆனவர்கள் என்றோ நினைத்துவிடக்கூடாது. தமிழகத்தில் 6வது பெரிய சமூகம் பிராமணர்கள். பிராமணர்கள் மனத்தை குலைக்க முயற்சிக்கின்றனர். குட்டிக்கரணம் போட்டாலும் அது நடக்காது.
அர்ஜூன் சம்பத், இந்து மக்கள் கட்சி தலைவர்: அந்தணர்களை அந்நியர்கள் என்றும், கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்றும் ஒருசில இனவெறி குழுக்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் திராவிட மாடல் என்ற போர்வையில் தொடர்ந்து அந்தணர்களை இழிவுப்படுத்தும் அக்கிரமம் நடக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அந்தணர் சமுதாயம் தமிழ் சமூகத்தில் பிரிக்க முடியாத சமூகம்.
ஒருகோடி இந்துகள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். எல்லோருக்குமான திராவிட மாடல் என்று கூறுகிறீர்கள். பிராமணர்களை இழித்து பேசும் உங்கள் கட்சியினரை கண்டிக்க மாட்டீர்கள். இதை முதல்வர் ஸ்டாலின் கண்டித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த சமுதாயத்தை யார் பழித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாய வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில், பிராமணர்களை பாதுகாக்க பி.சி.ஆர். சட்டம் போன்ற சட்டத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
+ There are no comments
Add yours