பாலாற்​றங்​கரை​ குடிசைகளில் வசிக்​கும் இருளர் மக்களை மாற்ற நடவடிக்கை !

Spread the love

செங்​கல்​பட்டு மாவட்டம் திருக்​கழுக்​குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்​சிக்​குட்​பட்ட காரைத்​திட்டு பகுதி​யில், ஏராளமான இருளர் பழங்​குடியின மக்கள் வசித்து வருகின்​றனர். இவர்​கள், பழங்​குடி​யினர் நலத்​திட்​டத்​தில் அப்பகு​தி​யில் அமைக்​கப்​பட்ட குடி​யிருப்பு​களில் வசித்து வருகின்​றனர். இந்நிலை​யில், காரைத்​திட்டு பாலாற்றின் முகத்து​வாரத்​தின் மிக அருகே பாலாற்​றங்​கரையோரத்​தில் உள்ள பனைமரங்​களுக்கு நடுவே, 40-க்​கும் மேற்​பட்ட குடிசை வீடுகள் அமைத்து இருளர் மக்கள் வசித்து வருகின்​றனர். இவர்​களின் பிள்​ளை​களை அருகில் உள்ள அரசு பள்ளி​களில் சேர்த்​துள்ளனர்.

குடிசைகள் அமைக்​கப்​பட்​டுள்ள பகுதி பாலாற்றில் அதிகள​வில் நீரோட்டம் ஏற்படும்​போது வெள்​ளத்​தில் மூழ்​கும் பகுதியாக உள்ளது. அப்பகு​தி​யில் பழங்​குடியின மக்கள் வசித்து வருவது அசம்​பா​விதங்கள் ஏற்பட வழிவகுக்​கும் என்ப​தால், அவர்களை பாது​காப்பான இடத்​தில் குடியமர்த்த பழங்​குடி​யினர் நலத்​துறை மற்றும் மாவட்ட நிர்​வாகம் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இருளர் பழங்​குடி​யினர் கோரிக்கை விடுத்​துள்ளனர்.

இந்நிலை​யில், சமீபத்திய ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து கேட்​டறிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின், பாலாற்​றங்​கரையோரம் வசித்து வரும் இருளர் பழங்​குடியின மக்களை பாது​காப்பான இடத்​தில் தங்கவைக்​கு​மாறும் புயல் பாதிப்பு நீங்​கியதும் அடிப்படை வசதி​களுடன் கூடிய நிரந்தர இடத்​தில் அவர்களை தங்கவைக்க ஏற்பாடுகளை செய்​யு​மாறும் அதிகாரி​களுக்கு உத்தர​விட்​டார்.

இதன்​பேரில், புயலின்​போது பாது​காப்பான இடத்​தில் தங்கவைக்​கப்​பட்ட இருளர் பழங்​குடி​யினர், புயல் நீங்​கியதும் பாலாற்றங்கரை​யிலேயே மீண்​டும் வசிக்​கின்​றனர். அதனால், துணை முதல்​வரின் உத்தரவை அமல்​படுத்​தும் வகையில் மேற்​கண்ட பகுதி​யில் வசிக்​கும் இருளர் மக்களை, நிரந்​தரமாக பாது​காப்பான இடத்​தில் தங்கவைக்க மாவட்ட நிர்​வாகம் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இருளர் பழங்​குடியின மக்கள் கோரிக்கை விடுத்​துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகு​தி​யில் வசிக்​கும் பழங்​குடியின மக்கள் கூறிய​தாவது: பாலாற்​றங்​கரை​யில் அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வரும் எங்களுக்கு, தன்னார்​வலர்கள் மற்றும் தொண்டு நிறு​வனங்கள் செய்​யும் உதவி​களை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் தடுக்​கின்​றனர்.

இங்கு தங்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவிக்​கின்​றனர். மின்சார வசதி​யில்​லாத​தால் எங்களின் பிள்​ளை​கள், வீடு​களில் படிக்க முடி​யாமல் மின்​விளக்​குகள் இருக்​கும் இடத்தை தேடிச்​சென்று படிக்​கும் அவலம் உள்ளது. எங்கள் பிரச்​சினைகள் குறித்து யாரிட​மாவது பேசுவதற்கு கூட அச்சமாக உள்ளது. எங்கள் பிள்​ளை​களின் கல்வி பாதிக்​காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றனர்.

இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கூறிய​தாவது: வாயலூர் ஊராட்​சிக்​குட்​பட்ட காரைத்​திட்டு அருகே பாலாற்​றங்​கரை​யில் குடிசைகளில் வசிக்​கும் இருளர் பழங்​குடியின மக்களை, அரசு திட்​டத்​தின் கீழ் மாற்று இடங்​களில் தங்க வைப்பதற்காக அடையாள அட்டைகளை கேட்​டுள்​ளோம்.

இதில், 9 குடும்பத்​தினரிடம் ஆதார் உட்பட அடையாள அட்டை இல்லாத​தால் பல்வேறு நிர்வாக சிக்கல் ஏற்​பட்​டுள்​ளது. எனினும், மற்​றவர்​களிடம் ​மானாம்பதி மற்றும் பூஞ்​சேரி பகு​தி​யில் வசித்ததற்கான அடை​யாள அட்​டைகள் உள்ளன. அத​னால், உரிய நடவடிக்கை மேற்​கொள்​வதற்கான ​முதற்​கட்ட பணி​கள் நடைபெற்​று வருகிறது என்றனர்​.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours