நடிகர் விஜய் இதுவரை அரசியலில் ஈடுபடபோவதாக நேரடியாக அறிவிக்கவில்லை என்றாலும், அவருடைய விஜய் மக்கள் இயக்கத்தை அவர் பலப்படுத்திவருவதால் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும், அதற்காகவே அவர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கருத்துகள் பரவி வருகின்றன.
முன்னதாக, கடந்த ஜூன் 17ஆம் தேதி 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ – மாணவிகளுக்கு நடிகர் விஜய், கல்வி உதவி தொகை வழங்கினார்.
மேலும், அவர் பிறந்த நாளன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 11ம்ஆம் தேதி நடிகர் விஜய் பனையூர் அலுவலகத்தில் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், தற்போது விஜய் மக்கள் இயக்க தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் வரும் சனிக்கிழமை (26.08.23) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில்,
“சென்னை பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 8.55 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்க உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத் தலைவரும், தகவல் தொழில்நுட்ப அணியில் இருந்து 3 நிர்வாகிகளை அழைத்து வர வேண்டும்.
இந்த கூட்டத்தில் மக்கள் இயக்க மகளிர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, விவசாய அணி உள்ளிட 10 அணிகள் மற்றும் விஜய் மக்கள் மன்றத்தின் நகர, ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours