போட்டித் தேர்விற்கு படிப்பவர்களை உபசரிக்கும் பசுமைப் பூங்கா!

Spread the love

மதுரை காந்தி அருங்காட்சியகம் அருகே போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு காலையில் மோர், மாலை டீ வசதியுடன் காற்றோட்டமான வட்டவடிவ இருக்கைகள் கொண்ட ‘பசுமை பூங்கா’ அமைத்துக் கொடுத்து உதவியிருக்கிறார் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன்.

வசதி படைத்த மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்கும் சூழலில், இங்கு ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள், போட்டித்தேர்வின் பாடத்திட்டங்களை அறிந்துகொண்டு, கடந்த காலத்தில் அந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாத்தாள்களை வழிகாட்டுதலாக கொண்டு குழுவாக அமர்ந்து தாங்களுக்குள் கலந்துரையாடி படிக்கின்றனர்.

மதுரையில் இப்படி மாணவர்கள் குழுவாக அமர்ந்து, அரசு காந்தி அருங்காட்சியகம், மாநகராட்சி அலுவலகம், கே.கே.நகர் மாநகராட்சி பூங்கா போன்ற இடங்களில் அமர்ந்து படித்து பல்வேறு அரசு உயர் பொறுப்புகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இது மற்ற மாணவர்களுக்கு உத்வேகமாக அமைகிறது.

காந்தி அருங்காட்சியகத்தில் இவர்களால் தொந்தரவு இருப்பதாக கூறி, தற்போது மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு தொந்தரவு ஏற்படுகிறது.

இந்த மாணவர்களின் துயரத்தை அறிந்த மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரையில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து காந்தி அருங்காட்சியகம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காகவே இயற்கை சூழலில் பசுமை பூங்காவை அமைத்துள்ளார்.

இந்த பூங்காவில் மாணவர்கள் வட்டமாக அமர்ந்து கலந்துரையாடி படிக்கும் வகையில், வட்ட வடிவ இருக்கைகள், மழை பெய்தாலும் நனையாத அளவிற்கு மேல் கூடாரமும் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள மரங்களைச் சுற்றிலும் சிமெண்ட் வராண்டா அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை சுற்றிலும் வெளியாட்கள் யாரும் உள்ளே வராத வகையில் கம்பிவேலி போடப்பட்டுள்ளது.

படிக்க வரும் மாணவர்களுக்கு இந்த பூங்காவில் எம்பி.சு.வெங்கடேசன் ஏற்பாட்டில் தன்னார்வலர்கள் உதவியுடன் தினமும் காலை மோரும், மாலை தேநீரும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட அறைகள் போன்றவையும் அமைத்து கொடுத்துள்ளார்

தற்போது இந்த பசுமைப் பூங்காவை, போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி அரசு பணிகளுக்கு தயாராகி வருகிறார்கள். மேலும், இங்கு கட்டிடங்கள் உள்ளிட்ட மேலும் சில வசதிகளை மேம்படுத்தி தரவும், டிஜிட்டல் நூலகம் அமைத்திடவும் சு.வெங்கடேசன் எம்.பி முயற்சி செய்து வருகிறார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours