லண்டனில் அண்ணாமலையை விஜய் சந்தித்ததாக வரும் தகவல் பொய்யானது என்று பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்குவதாக அறிவித்துள்ள விஜய், 2026-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரசியல் மேற்படிப்பு படிக்க லண்டன் சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, லண்டன் சென்று விஜய் ரகசியமாக சந்தித்ததாகவும், இதனை தொடர்ந்து திமுகவை தவிர வேறு எந்த கட்சியையும் விமர்சிக்கக் கூடாது. குறிப்பாக, விஜயை விமர்சனம் செய்யவே கூடாது என்று பாஜகவினருக்கு அண்ணாமலை உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து, தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறுகையில், “லண்டனில் அண்ணாமலை – விஜய் சந்திப்பு என்பது பொய்யான தகவல். அதுமாதிரி எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. அண்ணாமலை படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். அவர் யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.
+ There are no comments
Add yours