லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கில் மேல்முறையீடு !

Spread the love

லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தனியார் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம், முரளி என்ற நபர் ரூ.6.2 கோடி கடன் பெற்றுள்ளார். கடன் வாங்குவதற்கு முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்து போட்டிருந்தார்.

ஆனால், அதன் பின்னர் முரளி கடனாக பெற்ற பணத்தை திரும்ப அளிக்காததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015-ம் ஆண்டு அபிர்சந்த் நஹார் பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலிசார், போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது, தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது, பண மோசடி, ஆதாரங்களை திரித்து தாக்கல் செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் லதா ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதனை தொடர்ந்து தன் மீதான இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனுத்தாக்கல் செய்தார்.

அதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் மீது குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள 3 இந்திய தண்டனை சட்ட பிரிவுகளுக்கு உரிய ஆதாரங்கள் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை எனக்கூறி அவர் மீதான வழக்கில் இருந்து 3 பிரிவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆனாலும், போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது, தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது, மோசடி செய்து ஏமாற்ற முயற்சித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டது.

அதையடுத்து, கர்நாடகா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆட் பீரோ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஜெ.பி.பர்திவாலா அமர்வில் செப்டம்பர் 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours