தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி திட்டங்களில் ஒன்று மாநில மதிப்பீட்டு புலம். இதன்மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைக் கொண்டு மாணவ, மாணவிகளின் கற்றல் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். அடுத்தகட்டமாக சில விஷயங்களுக்கு அச்சாரம் போடவும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடப்பு மாதத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்கும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை 4 நாட்களுக்கு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
6 முதல் 9ஆம் வகுப்பு வரை:
இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகளுக்கான கேள்வித்தாள் exam.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும். இந்த கேள்வித்தாள்களை ஒருநாள் முன்கூட்டியே அரசு பள்ளிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதாவது, முந்தைய நாள் பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
தயார் நிலையில் ஆசிரியர்கள்:
இதில் ஏதாவது சிக்கல்கள் வந்தால் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொள்ளலாம். இதுபற்றி ஆசிரியர்களுக்கு உரிய முறையில் தெரியப்படுத்த வேண்டும். தேர்வு தொடங்கும் முன்பாக எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப பிரிண்ட் போட்டு கொள்ளலாம். இதற்காக அரசு பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பிரிண்டர்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தேர்வுகள் 40 நிமிடங்கள் நடத்தப்பட வேண்டும்.
+ There are no comments
Add yours