பாரதியாரையும் வம்புக்கு இழுத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சரை வசைபாடியிருக்கிறார் என்றும், திமுக மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள் என்றும் ஆளுநர் தமிழிசைக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி மீது தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வம்புக்கு இழுத்து, “பாரதியாருக்கு மரியாதை செலுத்தத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நேரமில்லையா” என்று கேட்டிருக்கிறார். அத்தோடு நிற்கவில்லை அவர். “அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் கை குலுக்கத் தெரிந்த முதலமைச்சருக்கு” என்று கூறியிருக்கிறார். முதலமைச்சர் கைகுலுக்கிய இடம், ஜி-20 மாநாட்டு நிகழ்ச்சியில் தான்.
தமிழிசைக்கு ஆளுநர் என்ற முறையில் தன்னை அழைக்காமல் பிரதமர் விட்டுவிட்டாரே என கோபமா? அல்லது ஜி-20 மாநாட்டிற்கு இப்படியொரு விளம்பரத்தைச் செய்தது வருத்தமா? பாரதியாரையும் வம்புக்கு இழுத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சரை வசைபாடியிருக்கிறார். ஆனால் இவை எதுவுமே தெரியாதது போல், அண்டை மாநில ஆளுநராகச் சென்று விட்டதால், தமிழ்நாட்டு அரசியல் விவரங்களுடன் தொடர்பு விட்டுப் போனவர் போல் பேசியிருப்பது வேதனைக்குரியது. அவரது பிறந்தநாளன்று முதலமைச்சரே மரியாதை செலுத்தி, நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை, பாரதியாரின் பெருமையை மட்டுமல்ல அனைத்துக் கவிஞர்களின் புகழையும் பரப்பி வரும் திமுக அரசைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆளுநர் பொறுப்பை வகிக்கும் தமிழிசை தன் அதிகாரிகளிடமாவது, “அவ்வப்போது தமிழ்நாடு அரசியல் நிலவரங்களைச் சொல்லுங்கள்” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, திமுக மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours