குன்னூர்: குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் கரடி மற்றும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலைத் தோட்டத்துக்கும், 100 நாள் வேலை பணிகளுக்கும் செல்ல முடியாமல் கரிமொறாஹட்டி உள்ளிட்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை ஊராட்சியில் கரிமொறாஹட்டி, பெரியார் நகர் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இதனைச் சுற்றியும் அடர்ந்த தேயிலைத் தோட்டங்கள் உள்ளதால் இந்தப் பகுதியில் காட்டெருமைகள், கரடி மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி உலா வருகின்றன. அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு உணவைத் தேடி வரும் இந்த விலங்குகள் வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகளை வேட்டையாடிச் செல்கின்றன.
இது குறித்து கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் கரடியைப் பிடிக்க அந்த பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் இதனை முறையாக வைக்காததால் கரடிகள் கூண்டுக்கு உள்ளே சென்று வெளியே வந்துவிடுகின்றன. இது மட்டுமல்லாமல் தற்போது பகல் நேரத்திலேயே சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் 100 நாள் பணிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் கண்டு மக்கள் நிம்மதியாக வாழ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
+ There are no comments
Add yours