குஜராத்தின் கெவாடியாவில் நடைபெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பசுமை வளத் துறைமுகத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கடலூ மாவட்டத்தில் இந்த பசுமை வளத் துறைமுகத்தை உருவாக்கவும், தொழிற்சாலைகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக்கூடிய வகையில் திறன் கொண்டதாக இந்த பசுமை வளத் துறைமுகத்தை அமைக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பதாக கூறினார்.
பசுமை வளத்துறைமுகத்தில் ஆண்டுக்கு 10 மில்லியன் டன் சரக்குகளை கையாள வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எ.வ வேலு தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் கடலோர சுற்றுலா மற்றும் கடல்நீர் விளையாட்டுக்களை அனுமதித்து நீல பொருளாதாரத்தை உயர்த்த தமிழ் நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் எ.வ வேலு குஜராத்தில் கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நாகை துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் சுங்க அலுவலகங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே மீண்டும் படகு சேவை தொடங்குவதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ வேலு கூறியிருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 1914 ஆம் ஆண்டு ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே ஆங்கிலேயர்களால் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் இந்த கப்பல் போக்குவரத்து கடந்த 1984 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours