நொய்யல் ஆற்றில் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்கள்- ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

Spread the love

திருப்பூர்: கோவை மாவட்டத்தில் தொடங்கும் நொய்யலாறு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் வழியாக காவிரியை சென்றடைகிறது. தமிழ்நாட்டின் இரட்டை தொழில் நகரங்களான கோவை, திருப்பூரில் நொய்யல் பிரதான அடையாளமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், நொய்யலில் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்கள் இருப்பது குறித்தும், கோவை, திருப்பூரில் புற்றுநோய் அதிகரித்திருப்பது குறித்தும் பொது சுகாதார நிபுணரும், மருத்துவருமான பிரபு தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் ஆய்வு செய்துள்ளனர்.

மனித குலம் உயிர் வாழ்வதற்கு குடிநீர் இன்றியமையாத ஒன்று. அந்த குடிநீரில் கார்சினோஜென்ஸ் எனப்படும் ரசாயனங்கள், தனிமங்கள் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை என்று, சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதில் கார்சினோஜென்ஸ் எனப்படும் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்கள் நொய்யல் ஆற்றில் அதிக அளவு இருப்பதுமருத்துவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2009-ம் முதல் 2022-ம் ஆண்டுவரை அடுத்தடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில், நொய்யல் நதியில் இந்த ரசாயன கலவை இருப்பதை உறுதிப்படுத்தி யுள்ளனர். காட்மியம், ஹெக்ஸவலன்ட் குரோமியம், நிக்கல், காரீயம், அர்சனிக், நைட்ரைட், பாஸ்பேட் ஆகியவை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த2021-ம் ஆண்டு தமிழ்நாடுபுற்றுநோய் பதிவு திட்டத்தில்,உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவைவிட மிக அதிக அளவில் மேற்கண்ட ரசாயனங்கள் இருப்பதும், நொய்யல் ஆறு கடுமையாக மாசுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களைவிட கோவை, திருப்பூரில் அபாய கட்டத்தை எட்டும் அளவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது. தொழிற்சாலை கழிவுகளை முறையாக சுத்திகரிக்காமல் ஆற்றிலும், நீர் நிலைகளிலும் விடுவதால் காலரா, வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் அதிகமாக ஏற்படுவதாகவும், அத்துடன் நீரையும், மண்ணையும், காற்றையும் தொழிற்சாலை கழிவுகள் மாசுபடுத்துவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சூழல் மற்றும் நீர் மாசுபாடு மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இந்த ஆய்வில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட தீங்கு ஏற்படுத்தும் உலோகங்கள், தனிமங்கள் மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தண்ணீர் மாசுபாட்டுக்கும், புற்றுநோய் தாக்கத்துக்கும் உள்ள தொடர்பை ஒப்பிட்டு பார்த்த போது, கோவையில் 7.7 சதவீதம் பேர் ப்ராஸ்டேட் புற்றுநோயாலும், 6.9% பேர் நுரையீரல் புற்றுநோய், 6.7 சதவீதம் பேர் கல்லீரல் புற்றுநோய், 5.1 சதவீதம் பேர் சிறுநீரக புற்றுநோய், 3.9 சதவீதம் பேர் சிறுநீர்ப்பை புற்றுநோய், 3.1 % பேர் இரைப்பை புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் திருப்பூரில் 3.2 சதவீதம் பேர் நுரையீரல் புற்றுநோய், 2.9 சதவீதம் பேர் ப்ராஸ்டேட் புற்றுநோய், 2.9 சதவீதம் பேர் சிறுநீரக புற்றுநோய், 1.6 சதவீதம் பேர் இரைப்பை புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நிலம், நீர் இரண்டிலும் மாநில சராசரியைவிட, கோவை, திருப்பூரில் மிக அதிக அளவில் மாசுபாடு உள்ளது.

இதுதொடர்பாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் கூறியதாவது: தொடர்ந்து பல ஆண்டுகளாக, தொழிற்சாலை கழிவுநீர் சாக்கடையாக நொய்யல் நதி மாற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் குறித்து எச்சரித்து வருகிறோம். இப்பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் பலனில்லை.

தற்போது, அறிவியல்பூர்வமாகநடத்தப்பட்ட ஆய்வில், நொய்யல் நதியில் தீங்குஏற்படுத்தும் ரசாயனங்கள் அதிக அளவில்இருப்பது குறித்தும், கோவை, திருப்பூரில் புற்றுநோய்பாதிப்பு அதிகமாக இருப்பது குறித்தும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நொய்யல் நதியை பாதுகாக்கமிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இதுதொடர்பாக விரிவாக திட்டமிட்டு செயல்பட்டால்தான், எதிர்கால சந்ததியை பாதுகாக்க முடியும்.

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், கொங்கு மண்டலத்தின் அடையாளமான நொய்யலையும் பாதுகாக்க அனைவரும் தீவிரம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours