சென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 24 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, அவருடைய இரண்டு வயது மகள், இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, பா.ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
+ There are no comments
Add yours