சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரயில்பாதை அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் நிறைவுபெறும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது புதிய ரயில்பாதை அமைக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது. ரூ.279 கோடியில் இதனை அமைக்க ரயில்வே வாரியம் உடனடியாக ஒப்புதல் அளித்தது. இந்த பணிகளுக்காக கடற்கரை வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் பாதையில் ரயில் சேவை சிந்தாதிரிப்பேட்டை வரை மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி முதல் கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது” என்றார்.
மேலும், “இப்போது ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இருந்து இயக்கப்படுவதால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். 4-வது ரயில் பாதை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில், நான்காவது பாதை அமைக்கும் பணிகளுக்கான தண்டவாளம் அமைப்பதற்காக கூவம் ஆற்றில் 500 இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதேபோல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தி அதில் எல்லைச் சுவர் கட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது என்பதால் 4-வது ரயில்பாதை அமைக்கும் பணிகள் ஜூன் மாதம் நிறைவு பெறும்” என்றார்.
+ There are no comments
Add yours