பள்ளிகளில் தொடரும் தீண்டாமை !

Spread the love

அரசு பள்ளியில் முதலமைச்சர் துவக்கி வைத்த காலை உணவு திட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் உணவு சமைத்ததால் காலை உணவை புறக்கணித்து குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழை தருமாறு காளிங்கராயன் பாளையம் பகுதியை சேர்ந்த சிலர் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் துவக்கி வைத்தார். இதனையொட்டி திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் ஊராட்சி காளிங்கராயன் பாளையத்தில் உள்ள , ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் மொத்தம் 47 மாணவர்கள் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆதிராவிடர் குடியிருப்புப் பகுதியை சேர்ந்த தீபா என்பவர் உணவு சமைத்து பள்ளி மாணவர்களுக்கு பரிமாறி உள்ளார். இதை அறிந்த ஒரு தரப்பினர் பள்ளி குழந்தைகளை உணவை சாப்பிட அனுமதிக்காமல் மாற்றுச் சான்றிதழ் கொடுங்கள் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம் என காலை உணவை புறக்கணித்து குழந்தைகளை சாப்பிட விடாமல் தடுத்துள்ளனர் . சம்பவத்தை அறிந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உணவு சமைக்கும் உமாவை மாற்ற முடியாது என அரசு தரப்பில் தெரிவித்ததால் சமாதானம் ஆகாத ஒரு தரப்பினர் உணவை புறக்கணித்து சென்றனர். உணவு சமைத்தவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் பள்ளி குழந்தைகளுக்கு உணவை வழங்க வேண்டாம் என சிலர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மீண்டும் தீபா உணவு சமைத்த நிலையில் 34 பள்ளிக்குழந்தைகள் உணவருந்தியுள்ளனர். 13 பேர் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளனர்.

இது குறித்து வள்ளிபுரம் பஞ்சாயத்து தலைவர் முருகேசனிடம் கேட்ட போது, “சம்பவம் உண்மைதான். ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் சிலர் எதிர்ப்பு தெரிவித்தது வருகின்றனர். பெற்றோர் அல்லாத சிலரும் தகவலறிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி உள்ளனர். சனிக்கிழமை பெரும்பாலான குழந்தைகள் காலை உணவை உட்கொண்டனர். இனி இது போன்று நடைபெறாது” என தெரிவித்தார். தொடர்ந்து எதிர்ப்பு எழுந்தால் காவல் துறை மூலம் முறையான சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக உணவு சமையலர் தீபாவை தொடர்பு கொண்ட போது, நேரடியாக பேசவோ, பேட்டி வழங்கவோ மறுத்த அவர் காலையில் குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து பரிமாறிய பின்னர் பனியன் நிறுவனத்திற்கு பணிக்கு செல்வதாகவும் தன்னிடம் நேரடியாக யாரும் பிரச்சினை செய்யவில்லை எனவும் மற்றவர்கள் தெரிவித்த பின்னரே தனக்கு இந்த எதிர்ப்பு குறித்த சம்பவம் தெரியவந்தது எனவும் தொடர்ந்து பணி செய்ய அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுச்சாமியிடம் கேட்ட போது, சம்பவம் குறித்து அறிந்த உடனடியாக பள்ளிக்கு சென்றதாகவும், பெருமாநல்லூர் காவல் துறையினர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், தீண்டாமை கொடுமை மற்றும் வழக்குகள் குறித்து எடுத்துரைத்து தெளிவு படுத்தி உள்ளோம். இனி இது போன்ற சம்பவம் நடைபெறாது என உறுதியளித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours