என் மண் என் தேசம் பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை ஊழல்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் படை வீடாம் திருச்செந்துாரில் பாதயாத்திரையின் 16வது நாளை நிறைவு செய்திருப்பது, பெருமைக்குரியது. அநீதியையும், அக்கிரமத்தையும், அடாவடியையும், அராஜகத்தையும் செய்த அசுரர்களை அடியோடு அழித்து, வெற்றி கொண்ட இந்த திருச்செந்துார் மண், நம் நோக்கத்திற்கும், பாதயாத்திரைக்கும் பலம் சேர்க்கிறது.
திருச்செந்துார் முருகன் கோவிலில், கடவுளுக்கு நேர்ந்து பசு மாடு அளிப்பர். தணிக்கை அறிக்கையில், 5,309 மாடுகளை காணவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் மாட்டைக் கொடுத்த பதிவுகள் இருக்கின்றன; ஆனால், மாடுகளை காணவில்லை.
மாடுகளை திருடி, தி.மு.க.,வினருக்கு விற்று விட்டனரா? ‘கிணற்றை காணவில்லை’ என வடிவேலு கதறுவதுபோல, திருச்செந்துார் கோவிலில் மாடுகளை காணவில்லை.
திருச்செந்துார் அருகே உள்ள ஆத்துார், வெற்றிலை சாகுபடிக்கு பெயர் பெற்றது. அதிக காரத்தன்மை மற்றும் செரிமான சக்தியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது.
இந்த வெற்றிலைக்கு கடந்த ஏப்ரலில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது, திருச்செந்துாருக்கு கிடைத்த பெருமை.
திருச்செந்துார் அமலி நகர் பகுதி மீனவர்களுக்கு துாண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு, 2022ம் ஆண்டு சட்டசபையில் அறிவிப்பு வெளியானது. இப்பணிகள், இதுவரை துவங்கப்படவில்லை. அறிவிப்பு வெளியாகி விட்டால், தானாகவே பாலம் வந்து விடுமா?
கடந்த ஒரு வாரமாக, இந்த மீனவர்கள் போராடி வருகின்றனர். இது மட்டும் அல்ல; மீனவர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதி எதையுமே, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.
மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் வழங்குவோம் என்று சொன்னீர்களே?
மீன்பிடி தடை கால நிவாரணமாக, 8,000 ரூபாய் வழங்குவோம் என்று சொன்னீர்களே?
புதிய மீன்வள கல்லுாரிகள், மீனவர் பகுதியில் புதிய பள்ளிகள் காட்டுவோம் என்று சொன்னீர்களே; இவையெல்லாம் என்ன ஆயின?
இந்தியாவின் கடலோர மாநிலங்களில் மீன் உற்பத்திக்காக, 26,050 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது, மத்திய அரசு. தமிழகத்துக்கு 2021 முதல் 2023 வரை, 617 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
மீனவ உள்கட்டமைப்பு நிதி மற்றும் ‘மத்சய சம்பதா’ திட்டம் இணைத்து, இதுவரை 1,356 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 457 மீனவர்கள் பயன் அடைந்துள்ளனர்
தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்க, 1,464 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 42,458 மீனவர்களுக்கு ‘கிசான் கடன்’ அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவை அத்தனையும், மீனவர்கள் நலனுக்காக பிரதமர் மோடி செய்தது.
தமிழகத்தில் ஆட்சியில் இருப்போர், மீனவர்களுக்கு ஒரு நன்மையையும் செய்யாத கூட்டம். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த கூட்டம்.
காங்கிரஸ் — தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 85 தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டபோது, கைகட்டி வேடிக்கை பார்த்த கூட்டம். பல தலைமுறைகளுக்கு நன்மை செய்த, ‘என் மகன்… என் பேரன்…’ என்று வேண்டுமானால் மாநாடு நடத்துங்கள்.
வரும் 17ல், ஸ்டாலின் புகழ் பாடும் இந்தப் போலி மாநாட்டிற்கான திடல் அமைக்க, மணல் கடத்திஉள்ளனர், தி.மு.க.,வினர்.
நேற்று முன்தினம், ராமநாதபுரத்தில் நடந்த இந்த சம்பவத்தை உடனடியாக தடுத்து நிறுத்தியது, பா.ஜ., சொந்தங்கள்.
‘அமலாக்கத் துறை செயல்பாட்டுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்’ என்று வாய்ச்சவடால் விடும் அமைச்சர் தான் அனிதா ராதாகிருஷ்ணன். 2001- – 2006 காலகட்டத்தில், இவர் அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது, 4.9 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, இவர் மீது 2006ல் வழக்குப் பதியப்பட்டது; 2009ல் தி.மு.க.,வில் ‘சரண்டர்’ ஆகிட்டார்.
இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு உதவிட, அமலாக்கத் துறை முன்வந்தது; ஆனால், அதை ஏற்க மறுத்துள்ளது, லஞ்ச ஒழிப்புத் துறை. வழக்கை சந்திக்க, அமைச்சர் ஏன் பயப்படுகிறார்?
அளவுக்கு அதிகமா சேர்த்தது, 4.9 கோடி என்பது, 4,999 கோடி ரூபாய் என்ற உண்மை வெளியே வந்து விடும் என்பதாலா?
கடந்த, 2020, டிச., 31ல், அனிதா முன்னிலையில் பொது வெளியில் பேசிய, தி.மு.க., நிர்வாகி உமரி சங்கர், ‘இந்த ஊரில் இரண்டாம் பெரிய பணக்காரர் அனிதா ராதாகிருஷ்ணன். அவரிடம் 4,999 கோடி ரூபாய் சொத்து உள்ளது’ என்று உண்மையை சொல்லி விட்டார்.
அமலாக்கத் துறை, ஏற்கனவே இவருடைய 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளது. இன்னும் 4,992 கோடி சொத்துக்கள் பாக்கி இருக்கின்றன. அனிதா ராதாகிருஷ்ணன் தலையில் ஊழல் கத்தி தொங்குகிறது.
பலியாக்காதீர்:
தி.மு.க.,விடம் ஒரே ஒரு கேள்வி. ஆறாவது முறையாக ஆட்சியில் இருக்கும் நீங்கள், தமிழகத்திற்கு எத்தனை மருத்துவக் கல்லுாரிகள் கொண்டு வந்தீர்கள்?
கடந்த 1967 முதல் 1975 வரை, தமிழகத்தில் ஒரு புதிய மருத்துவக் கல்லுாரி கூட நிறுவப்படவில்லை. ஆறு முறை ஆட்சியில் இருந்தும், தி.மு.க.,வால் தமிழகத்திற்கு கிடைத்த மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை வெறும் 5.
ஆனால், மருத்துவ படிப்பை வைத்து, தி.மு.க., செய்யும் அரசியல் வெட்கக்கேடானது. உங்கள் அரசியலுக்கு மாணவர்களை பலி ஆக்காதீர்கள்.
+ There are no comments
Add yours