சேலம்: திமுக-வினர் சைபர் கிரைம் போல வாக்காளர் பெயர் பட்டியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, எச்சரிக்கையுடன் ஓட்டளிக்கும் வாக்குச்சாவடி மையங்களில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும், என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியுள்ளார்.
சேலம் அஸ்தம்பட்டி பகுதி அதிமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிங்காரம் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு பேசியது: “அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கரத்தை வலுப்படுத்த வேண்டும்.ஒரே எதிர்பார்ப்பு, ஒரே எண்ணம் ஒரே ஆசை மீண்டும் அவர் முதல்வராக வேண்டும். இதற்கு பொது மக்கள் தயாராக உள்ளனர்.
ஒரு சாமானிய முதல்வர், உடனே பார்க்கக்கூடிய முதல்வர், நினைத்தவுடன் பேசக்கூடிய முதல்வர், மீண்டும் முதல்வராக வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த தேர்தலில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் தோற்றோம். பல தொகுதிகளில் சிறப்பாக களப்பணியாற்றினோம். இருப்பினும் தோல்வியை தழுவினோம். அதிமுக கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தை சட்டமன்றத்தில் பாராட்டி உள்ளனர்.
இந்தத் திட்டத்தை கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் பழனிசாமி தான். அவர் மீண்டும் முதல்வராக வந்தால் இதுபோன்ற நல்ல திட்டங்களை தருவார். முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவரது ஆட்சியில் விலைவாசி உயரவில்லை. சட்டமன்றத்தில் நெஞ்சுறுதியோடு, மன உறுதியோடு பணியாற்றி வருகிறார்.
திமுக எப்படி கபட நாடகம் ஆடுகிறது என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எட்டு ஆண்டுகள் மின்சார கட்டணம் உயர்த்த வில்லை. இதை அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவித்தார் .ஆனால், இப்போது சொத்து வரி ஏறிவிட்டது .குப்பை வரி போட்டு விட்டார்கள். மின்சார கட்டணம் உயர்ந்துவிட்டது. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டுமென்றால் வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வர வேண்டும். தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை ஒரே ஆண்டில் கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான். இது போன்ற சாதனைகளை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்.
திமுக-வினர் சைபர் கிரைம் போல வாக்காளர் பெயர் பட்டியிலில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, எச்சரிக்கையுடன் ஓட்டளிக்கும் வாக்குச்சாவடி மையங்களில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். திமுக-வினர் சைபர் கிரைம் போல வேலை செய்து வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் மூன்று வாக்குச்சாவடி மையங்களில் இருக்கும்.
நீங்கள் ஓட்டு போடும் வாக்குச்சாவடி மையத்தில் உங்கள் பெயர் இருப்பதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். நம்முடைய வாக்குகள் மட்டுமல்ல மற்றவர்களின் வாக்குகளையும் நாம் உறுதி செய்ய வேண்டும், இந்தப் பணியில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சரியாக பணியாற்றினால் அடுத்தது அதிமுக ஆட்சிதான் ஏற்படும். இங்கு வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை. திமுக-வை வீழ்த்துவோம், மீண்டும் அதிமுக ஆட்சியை ஏற்படுத்துவோம்” இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம்.கே. செல்வராஜ், ரவிச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours