பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்

Spread the love

சென்னை: தமிழகத்தில் கன மழையால் தண்ணீரில் மூழ்கியுள்ள வேளாண் பயிர்களைக் கணக்கெடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த இரண்டு நாட்களாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பெய்துவரும் கனமழையால் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கனமழையின் காரணமாக அப்பகுதிகளில் ஓடும் ஆறுகள் மற்றும் சிற்றாறுகளில் தண்ணீர் அதிக அளவு சென்று கொண்டிருக்கிறது. ஆற்றின் கரைகள் பல இடங்களில் பலவீனமாக இருப்பதால் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

எனவே, வருவாய் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆற்றங்கரை ஓரங்களிலும், ஏரிகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் பலவீனமான கரைப் பகுதிகளைக் கண்டறிந்து, உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி அவற்றை பலப்படுத்துவதுடன், கனமழையால் ஆறு, ஏரி, வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும், நீர்வழிப் பாதைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறேன். மேலும், அரசு அதிகாரிகள் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று தண்ணீரில் மூழ்கியுள்ள வேளாண் பயிர்களைக் கணக்கெடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரு நாட்களாகப் பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள நீரை கனரக மோட்டார்களை வைத்து வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.கடந்த வாரம் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வெள்ள நீரால் பயிர்கள் மூழ்கி பாதிப்படைந்த விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத்தை வழங்குமாறு ஏற்கெனவே திமுக அரசை வலியுறுத்தி இருந்தேன்.

பல இடங்களில் நிவாரணங்கள் உண்மையாகவே பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை என்று, பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டுவருவதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. எனவே, அரசின் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours