அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது கைது சரியானது என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.
அதன்பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்டபோது, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றபத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் டிரங்கு பெட்டியில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.
ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இன்று நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்பு காணொளி முறையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 28ம் தேதி வரை நீட்டித்த நீதிபதி, அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறையினருக்கு உத்தரவிட்டார்.
+ There are no comments
Add yours