திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று திடீரென காலமானார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து, நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் மாரிமுத்து மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான மாரிமுத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் மாரிமுத்து அவர்கள்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார். மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours