காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர் தேவேந்திரன், கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரம் வருமாறு:-
காவிரி பாசன விவசாய சங்க தலைவர் சிவஞானம்:
தண்ணீர் இன்றி வறட்சியால் கருகிய குறுவை நெற்பயிர்களை கணக்கீட்டு ரூ.30ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வரும் சம்பா சாகுபடிக்கு உழவு மானியமும், சம்பா தொகுப்பும் வழங்க வேண்டும். வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்ட வேண்டும்.
கிராம விவசாய சங்க தலைவர் மணியன்: வேதாரண்யம் ஒன்றியம் கருப்பம்புலம் கூட்டுறவு வங்கி கட்டிடம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணி துறையினர் முறையாக ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
தலைஞாயிறு விவசாயிகள் சங்க தலைவர் பாஸ்கரன்:
தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் விலை தமிழ்நாடு வேளாண் விற்பனை குழு மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். நாகை மாவட்ட தொழில் மையம், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானியத்தில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
முன்னதாக விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கருகும் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்.
இதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவைப்பயிர்களை உடனடியாக கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
+ There are no comments
Add yours